சுகாதாரமற்ற முறையில் உணவு பொருள் விற்பனை செய்த 4 கடைகள் மூடல்


சுகாதாரமற்ற முறையில் உணவு பொருள் விற்பனை செய்த 4 கடைகள் மூடல்
x

குமரி மாவட்டத்தில் நேற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் சுகாதாரமற்ற முறையில் உணவுப்பொருள் விற்பனை செய்த 4 கடைகள் மூடப்பட்டன. பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த 16 கடைகளுக்கு ரூ.32 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் நேற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் சுகாதாரமற்ற முறையில் உணவுப்பொருள் விற்பனை செய்த 4 கடைகள் மூடப்பட்டன. பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த 16 கடைகளுக்கு ரூ.32 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

திடீர் சோதனை

கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சுற்றுலாத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் திடீர் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், கப்புகள் பயன்படுத்தும் கடைகள் மீது நடவடிக்கை எடுத்து பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன்படி நாகர்கோவிலில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டார்கள். இதன் தொடர்ச்சியாக குமரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் குமாரபாண்டியன், சங்கரநாராயணன், வின்சென்ட் கிளாட்சன், பிரவீன்ரெகு, நாகராஜன், தங்கசிவம் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு உள்ளதா? என திடீர் சோதனை மேற்கொண்டனர்.

4 கடைகள் மூடல்

அப்போது கருங்கல், திக்கணங்கோடு, அழகியமண்டபம் ஆகிய பகுதிகளில் உள்ள 48 கடைகளில் அவர்கள் இந்த சோதனையை மேற்கொண்டனர். இதில் 16 கடைகளில் 40 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.32 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் இல்லாமல் உணவு பொருள் சம்பந்தப்பட்ட தொழிலை நடத்தியது, பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி உணவு பொருள் விற்பனை செய்தது, சுகாதாரமற்ற முறையிலும், தரமற்ற வகையிலும் உணவு பொருட்களை விற்பனை செய்தது போன்ற குற்றங்களுக்காக கருங்கல் பகுதியில் ஒரு கடையும், திக்கணங்கோடு பகுதியில் 2 கடைகளும், அழகியமண்டபம் பகுதியில் ஒரு பேக்கரியும் என மொத்தம் 4 கடைகளை 14 நாட்கள் மூட தற்காலிக தடையை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்குமார் உத்தரவிட்டார்.

இந்த 4 கடைகளிலும் அதிகாரிகள் தெரிவித்த குறைகளை நிவர்த்தி செய்து, உணவு பாதுகாப்புத்துறை ஆய்வாளர் மறு ஆய்வு செய்த பிறகுதான் மூடப்பட்ட 4 கடைகளையும் திறக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story