உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் இடத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்
உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நடைபெறும் பகுதியில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் கிராமம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 9-ந் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 12-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
இந்த நிலையில் உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நடைபெறும் பகுதியில் டாஸ்மாக் கடைகள் இன்று முதல் 3 நாட்களுக்கு மூடப்படுகிறது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது ;
கிராமம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும். நாளுக்கு முன்னதாக இன்று (7-ந் தேதி) காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான 9-ந் தேதி நள்ளிரவு 12 மணிவரையிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் வாக்கு எண்ணிக்கை நாளான 12-ந் தேதியும் மூடப்பட்டிருக்க வேண்டும். வாக்கு பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதியை சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் அமையப்பெற்ற சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் விற்பனைக் கடைகளும் மற்றும் அதனுடன் உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது.
மேற்படி நேரத்தில் எந்தவொரு மதுபானத்தையும் விற்பனை செய்யவோ அல்லது வெளியில் கொண்டு செல்லவோ கூடாது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. மேற்படி மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பினை கடைபிடிக்க தவறும்பட்சத்தில் மதுபான விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இதேபோல் காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தியும், மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பித்து உள்ளார்.