தேனி மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்; நாளை தொடங்குகிறது


தேனி மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்; நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 7 Feb 2023 1:30 AM IST (Updated: 7 Feb 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நாளை தொடங்குகிறது.

தேனி

தேனி மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நாளை தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

முதல்-அமைச்சர் கோப்பை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 2022-23-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவில் தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நாளை (புதன்கிழமை) தொடங்கி வருகிற 24-ந்தேதி வரை நடக்கிறது.

கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுபந்து, வளைகோல்பந்து, நீச்சல், கைப்பந்து, மேஜைப்பந்து, செஸ் ஆகிய போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது. கிரிக்கெட் போட்டி தேனி ஆயுதப்படை மைதானத்தில் நடக்கிறது. கால்பந்து போட்டி தேனி நாடார் சரசுவதி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடக்கிறது.

கபடி, சிலம்பம், கூடைப்பந்து, இறகுபந்து, வளைகோல்பந்து, கைப்பந்து, மேஜைப்பந்து, கிரிக்கெட், செஸ் ஆகிய போட்டிகள் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நாளை தொடங்கி 10-ந்தேதி வரையும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரையும் நடக்கிறது. தடகள போட்டிகள் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 21, 22-ந்தேதியும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு 23, 24-ந்தேதியும் நடக்கிறது. நீச்சல் போட்டி பள்ளிகளுக்கு 8-ந்தேதியும், கல்லூரிகளுக்கு 14-ந்தேதியும் நடக்கிறது.

இதேபோல், அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் 16, 17-ந்தேதிகளிலும், பொதுப்பிரிவினருக்கான போட்டிகள் 20, 21-ந்தேதிகளிலும் நடக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் வருகிற 15-ந்தேதி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

ஆன்லைன் பதிவு

ஆன்லைனில் பதிவு செய்து கொள்பவர்கள் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைன் பதிவு விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்கள் கொண்டு வராத வீரர், வீராங்கனைகள் கண்டிப்பாக மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். அத்துடன் ஆதார் கார்டு நகல் கொண்டு வர வேண்டும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் பரிசுத்தொகை வரவு வைக்கப்படும் என்பதால் வங்கிக்கணக்கு புத்தக நகலும் போட்டி நடக்கும் நாளில் கொண்டு வர வேண்டும்.

மாவட்ட அளவில் தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.2 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.1,000 வழங்கப்படும். மாவட்ட அளவிலான தனிநபர் போட்டிகளில் முதலிடம் பிடிப்பவர்களும், குழுப்போட்டிகளில் தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகளும் மாநில அளவிலான போட்டியில் அரசு செலவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story