முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்
குண்டடம்,
குண்டடம் ஊராட்சி ஒன்றியம் என்.காஞ்சிபுரம் மற்றும் ஜோதியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
காலை உணவு திட்டம்
தமிழ்நாட்டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் என்.காஞ்சிபுரம் மற்றும் ஜோதியம்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளிகளில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது :-
1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நகர்புறம் மற்றும் கிராமப் பகுதிகளில் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு திங்கட்கிழமையன்று சேமியா உப்புமா - காய்கறி சாம்பாரும், செவ்வாய்கிழமை ரவா, காய்கறி கிச்சடியும், புதன்கிழமை வெண்பொங்கல், காய்கறி சாம்பாரும் வியாழக்கிழமை சேமியா உப்புமா, -காய்கறிசாம்பாரும், வெள்ளிக்கிழமை கோதுமை ரவா - காய்கறி வழங்கப்படும்.
முதற்கட்டமாக குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 24 ஊராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சியில் செயல்பட்டு வரும் 77 அரசு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சர் காலை உணவுத்திட்டம் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் காலை சிற்றுண்டிகள் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.