கர்நாடகாவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லக்கூடாது: மாநாட்டில் அண்ணாமலை பேச்சு


கர்நாடகாவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லக்கூடாது: மாநாட்டில் அண்ணாமலை பேச்சு
x

தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்போம் என சொல்லும் வரை கர்நாடகாவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லக்கூடாது என கரூரில் நடந்த மாநாட்டில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

கரூர்

மாற்றத்திற்கான மாநாடு

கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நேற்று கரூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்கம் மற்றும் கரூர் மாற்றத்திற்கான மாநாடு நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சக்திவேல்முருகன் வரவேற்புரை ஆற்றினார். மாநில துணைத்தலைவரும், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான ராமலிங்கம் பேருரை ஆற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை இன்று தீபாவளி பண்டிகை போல அனைவரும் குதூகலமாக இருக்கிறார்கள். தமிழக சரித்திரத்தை பார்க்கும் போது கரூர் மண்ணிற்கு ஒரு சிறப்பு இருக்கிறது. இது ஆன்மிகத்தில் செழிப்படைந்துள்ள மண்.

தலைகுனிவு

சேர, சோழ, பாண்டியர் காலத்தில் கரூருக்கு என்று தனி சிறப்பு உள்ளது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக தமிழக அரசியல் கெட்டு போய் இருக்கிறது என்றால், அதற்கும் மையப்புள்ளியாக கரூர் மாறியிருந்தது. ஓட்டுக்கு பணம் என்ற அவமானம் கரூரில் எப்போதும் இருந்தது. அதற்கு இங்குள்ள அரசியல் காரணம்.2015-க்கு பிறகு நடந்த ஒரு தேர்தலில் இந்திய வரலாற்றில் முதன்முதலாக பணத்திற்காக நிறுத்தப்பட்ட தேர்தல் அரவக்குறிச்சி தேர்தல். ஆன்மிகத்திற்கு பெயர் போன மண், தற்போது அரசியல்வாதிகளின் சில பேரின் கெட்ட செயலால் ஒரு தலைக்குனிவை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஊராக கரூர் மாறியிருக்கிறது. இழந்த பெருமையை கரூர் திரும்ப எடுக்க வேண்டும். இதனால் தான் பா.ஜ.க. மாநாடு மாற்றத்திற்கான மாநாடு என பெயர் வைத்துள்ளனர்.

50 தேர்தல் வாக்குறுதிகளை கூட

செந்தில்பாலாஜிக்கு பா.ஜ.க.வை பார்த்து பயம் இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் கரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய தி.மு.க. தொண்டர்களுக்கு பா.ஜ.க.வை பார்த்து எதற்கு பயம். பா.ஜ.க. 1 ஆண்டு, 2 ஆண்டு, 5 ஆண்டு கழித்து கூட வருவோம். ஆனால் கண்டிப்பாக வருவோம். அதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது. சமூக வலைத்தளங்களில் பதிவு செய்கிறார்கள் என்பதற்காக பா.ஜ.க. தொண்டர்களை கைது செய்கிறார்கள். தற்போது கூட்டத்திற்கும் தடை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.கரூர் மாவட்டத்தில் தி.மு.க. முழுவதுமாக அழியும் நேரம் வந்துவிட்டது. எங்கேயும் தி.மு.க.வின் அடிச்சுவடி தெரியாத இல்லாத கரூர் மாவட்டமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் போற்றக்கூடிய உத்தம தலைவராக பிரதமர் மோடி உருவெடுத்து இருக்கிறார். இந்தியாவில் 100 பேரில் 78 பேருக்கு பிரதமரை பிடிக்கும் என்று கூறுகிறார்கள். இதனால்தான் உலகத்தில் நம்பர்-1 பிரதமர் என்ற பெயரை எடுத்துள்ளார். தி.மு.க. 510 வாக்குறுதிகளை கூறியிருக்கிறார்கள். 2 ஆண்டுகளில் 50 தேர்தல் வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை.

தமிழகத்திற்குள் வரமாட்டார்

பா.ஜ.க. ஆட்சி கர்நாடகாவில் இருக்கும்போது காவிரி ஆணையம் கூறிய தண்ணீர் வந்தது. மேகதாது கட்டுவதற்கு தமிழகத்தின் அனுமதி வேண்டும் என மத்திய அரசு கூறியபோது மேகதாது அணை கட்டவில்லை. தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி இருக்கிறது. கர்நாடகா துணை முதல்-அமைச்சர் டி.கே.சிவக்குமார் இந்த ஆண்டு காவிரி நீர் தமிழகத்திற்கு கிடையாது. மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கூறியுள்ளார்.தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்படி எதிர்க்கட்சி கூட்டத்திற்கு கர்நாடகாவிற்கு வருகிற 11-ந் தேதி செல்வார் என பார்ப்போம். முதல்-அமைச்சர் கர்நாடகாவிற்கு சென்றால் அவர் மீண்டும் தமிழகத்திற்குள் வரமாட்டார். வருவதற்கும் நாங்கள் விடமாட்டோம். தமிழகத்திற்கு காவிரி நீர் தரமுடியாது என கூறிய பிறகும், அவர்கள் நடத்தும் கூட்டத்திற்கு தமிழ் இனத்தை அடமானம் வைத்து விட்டு, அரசியல் லாபத்திற்காக முதல்-அமைச்சர் சென்றால் பா.ஜ.க. அதனை பார்த்து கொண்டு இருக்காது.

ஊழல் இல்லாத ஆட்சி

கோட்டையை முற்றுகையிடுவது மட்டுமில்லை. நீங்கள் எப்படி கோட்டைக்குள் செல்கிறீர்கள் என பார்ப்போம். தமிழக முதல்-அமைச்சர் கர்நாடகாவில் நடக்கும் எதிர்க் கட்சி கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும். கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்போம் என சொல்லும் வரை கர்நாடகாவிற்கு முதல்-அமைச்சர் செல்லக் கூடாது. முதல்-அமைச்சர் கூட்டத்தை புறக்கணித்தால் தமிழக பா.ஜ.க. முதல்-அமைச்சருடன் இருக்கும்.பா.ஜ.க. 2014-ம் ஆண்டு தேர்தலில் 283 இ்டங்களில், 2019-ம் ஆண்டு 303 இடங்களில் வெற்றி பெற்றது. 2024-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க.விற்கு 450 இடம் என மக்கள் முடிவு செய்து விட்டனர். பிரதமர் நரேந்திர மோடி நம்பர்-1 பிரதமராக உள்ளார். ஊழல் இல்லாத ஆட்சி நடத்துகிறார். ஒரே கட்சி தனி பெரும்பான்மையோடு, பா.ஜ.க. நாடாளுமன்றத்தில் அமரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு, மாவட்ட தலைவர் செந்தில்நாதன் செங்கோலை பரிசாக வழங்கினார்.


Next Story