முதல்-அமைச்சர் கோப்பைக்கான பொதுப்பிரிவு விளையாட்டு போட்டிகள்-நாளை முதல் 3 நாட்கள் நடக்கிறது
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான பொதுப்பிரிவு விளையாட்டு போட்டிகள் நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பொதுப்பிரிவு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்ட அளவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுப் பிரிவு ஆண்களுக்கான கபடி, கைப்பந்து, இறகுப்பந்து (ஒற்றையர்), சிலம்பம் ஆகிய போட்டிகள் நாளை (திங்கட்கிழமை) தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
இதேபோல் பெண்களுக்கான கபடி, கைப்பந்து, இறகு பந்து (ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர்) சிலம்பம் ஆகிய போட்டிகள் நாளை மறுநாளும் (செவ்வாய்க்கிழமை), ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தடகள போட்டிகள் மார்ச் மாதம் 1-ந் தேதியும் (புதன்கிழமை) தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
இணையதளத்தில் பதிவு
இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் பொதுப்பிரிவு போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். போட்டி நடைபெறும் நாளில் தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் காலை 8 மணிக்கு ஆஜராக வேண்டும்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள ஏற்கனவே இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இணையதளத்தில் பதிவு செய்யாமல் நேரடியாக போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.