சி.எம்.சி. மருத்துவ மாணவர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு
சி.எம்.சி. மருத்துவ மாணவர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் பாகாயத்தில் சி.எம்.சி. மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு மருத்துவம் பயிலும் மாணவர்கள் விடுதியில் தங்கி உள்ளனர். இந்த நிலையில் முதலாம் ஆண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் அரை நிர்வாணப்படுத்தி டவுசருடன் விடுதி வளாகத்தில் ஓட விட்டு ராக்கிங்கில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், குட்டிக்கரணம், தண்டால் எடுப்பது, மாணவர்கள் கட்டி பிடித்து முத்தம் கொடுக்க செய்வது என அவர்கள் கொடுமை செய்துள்ளனர்.
இதுகுறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும் மருத்துவ கல்லூரி நிர்வாகத்திற்கும் புகார் கடிதம் வந்தது. இதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி சீனியர் மாணவர்கள் 7 பேரை இடைநீக்கம் செய்தனர்.
இந்த நிலையில்அவர்கள் மீது மருத்துவக் கல்லூரி முதல்வர் சாலமன்சதீஷ்குமார், பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி 7 மாணவர்கள் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
7 மாணவர்களின் ஒருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றும் மற்ற 6 பேரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.