கூட்டுறவு சங்க தொ.மு.ச. நிர்வாகிகள் கூட்டம்
நெல்லையில் கூட்டுறவு சங்க தொ.மு.ச. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தொ.மு.ச. நிர்வாகிகள் கூட்டம் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று நடைபெற்றது. தொ.மு.ச. பேரவை செயலாளர் பொன்னுராம் தலைமை தாங்கினார். செயலாளர் தர்மன், பொதுச்செயலாளர் தணிகைவேல், பொருளாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் வில்சன் வரவேற்று பேசினார்.
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் பேசினர். கூட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது. நஷ்டத்தில் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு பொது வினியோக திட்டத்தின் மூலம் மானிய தொகை விடுவித்த முதல்-அமைச்சர் மற்றும் கூட்டுறவு துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாய பயிர்கடன், நகை கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்திருப்பதால், அதற்கான தொகையை தமிழக அரசு உடனே விடுவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகி முகமது சைபுதீன், நெல்லை மாவட்ட செயலாளர் கண்ணன், தூத்துக்குடி மாவட்ட செலாளர் வேல்முருகேசன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் வேலாயுதம், கண்ணுசாமி, தென்காசி மாவட்ட தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.