கூட்டுறவு சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கூட்டுறவு சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சாதிக் அலி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட பொருளாளர் சக்திவேல், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் பிரபாகரன், துணைத்தலைவர் பால்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ், 5 சதவீத கருணை தொகை வழங்க வேண்டும். அனைத்து கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். மேலும் பொது வினியோக திட்டத்துக்கு தனி துறையை உருவாக்க வேண்டும். அதேபோல் பயிர்க்கடன், நகைக்கடன், சுயஉதவிக்குழுக்களின் கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்ததற்கு உரிய தொகையை சங்கங்களுக்கு வழங்க வேண்டும். 500 ரேஷன் கார்டுகளுக்கு அதிகமாக உள்ள ரேஷன்கடைகளுக்கு எடையாளரை நியமிக்க வேண்டும் என்பன உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.