கூட்டுறவுத்துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவுத்துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.
தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு துணை பதிவாளர் உமாதேவியை பணி நீக்கம் செய்ய வேண்டும். பால் கூட்டுறவு தணிக்கை மற்றும் வீட்டு வசதி துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை உடனே பணி விடுவிப்பு செய்திட வேண்டும். பால் கூட்டுறவு தணிக்கை துறையில் 5 ஆண்டுகளுக்கு மேல் இயக்குனராக பணிபுரியும் பிரமிளாவை பணியிட மாற்றம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த கூட்டுறவுத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 22 பேர் நேற்று ஒரு நாள் பணிக்கு செல்லாமல் தற்செயல் விடுப்பு எடுத்து அலுவலக வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெறிச்சோடிய அலுவலகம்
போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் சிவக்குமார் சங்கத்தின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். அப்போது கூட்டுறவுத்துறை ஊழியர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசையும், கூட்டுறவுத்துறைைய வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். ஊழியர்கள் பணிக்கு வராததால் கூட்டுறவுத்துறை அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டதோடு, பணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டன.