11 தொழில்முனைவோர்களுக்கு ரூ.37 லட்சம் இணை மானிய நிதி


11 தொழில்முனைவோர்களுக்கு ரூ.37 லட்சம் இணை மானிய நிதி
x
தினத்தந்தி 4 Jun 2023 12:15 AM IST (Updated: 4 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் 11 தொழில்முனைவோர்களுக்கு ரூ.37 லட்சம் இணை மானிய நிதியை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

மயிலாடுதுறை

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் 11 தொழில்முனைவோர்களுக்கு ரூ.37 லட்சம் இணை மானிய நிதியை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

வாழ்ந்து காட்டுவோம் திட்டம்

தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மயிலாடுதுறை மாவட்டத்தில் செம்பனார்கோயில் மற்றும் சீர்காழி வட்டாரங்களில் 94 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் ஊரக தொழில் முனைவுகளை உருவாக்குதல், நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவைகள்தான் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஊராட்சிகளில் தொழில்சார் சமூக வல்லுநர் மூலமாக தொழில்முனைவோர்களை அடையாளம் கண்டு அவர்களை மகளிர் வாழ்வாதார சேவை மையம் வாயிலாக வணிக திட்டம், தொழிலுக்கு ஏற்றவாறு சேவைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.அதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இணைமானிய நிதி கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு மாவட்ட தேர்வுக்குழு மூலமாக தகுதியான பயனாளிகளுக்கு இணை மானிய நிதி வழங்கும் விழா நடந்தது.

ரூ.37 லட்சம் நிதியுதவி

விழாவில் 11 தொழில்முனைவோர்கள் தேர்வு செய்து அவர்களுக்கு ரூ.37 லட்சத்துக்கான வரையோலையை கலெக்டர் வழங்கினார். அப்போது கலெக்டர் பேசுகையில், பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்தால் தான் சமுதாயம் முன்னேற்றம் அடையும். மயிலாடுதுறை மாவட்டத்தில் தொழில் வாய்ப்பு நிறைய உள்ளது. அதனை தொழில்முனைவோர்கள் பயன்படுத்தி உற்பத்தியை பெருக்கி கொள்ள வேண்டும். தரமான பொருட்களை உற்பத்தி செய்வதோடு தொழிலில் நேர்மை, உழைப்பு, நம்பிக்கை இருந்தால் விற்பனை அதிகரிக்கும். செய்ய கூடிய தொழிலில் தொழில் வாய்ப்புகள் எப்படி உள்ளது என்று அறிந்துக்கொண்டு தொழில் செய்து தொழில்முனைவோர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றார்.

இதில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் வேல்முருகன், முன்னோடி வங்கி மேலாளர் முத்துசாமி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிவண்ணன் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட வங்கியாளர்கள் உடனிருந்தனர்.


Next Story