போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
ஊட்டி
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
இலவச பயிற்சி வகுப்பு
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் எஸ்.எஸ்.சி., ரெயில்வே, வங்கி தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்பை ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் கலெக்டர் அம்ரித் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-
இந்த திட்டத்தின் மூலம் 150 மாணவர்களுக்கு திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மொத்தம் 300 மணி நேரம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். 100-க்கும் மேற்பட்ட மாதிரி தேர்வுகளுடன் நேரடி பயிற்சி வழங்கப்படுகிறது. வாரந்தோறும் சனிக்கிழமை மாதிரி தேர்வு நடத்தப்படும். மாணவர்களுக்கு இலவச பாடக்குறிப்புகள் வழங்கப்படும்.
பொது அறிவு
போட்டி தேர்வில் வெற்றி பெற தினமும் செய்தித்தாள்களை படித்து பொது அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். எனவே தாங்களாகவே முன்வந்து பயிற்சி வகுப்பில் பங்கேற்று வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். மேலும் ஏதேனும் தேவைகள் இருந்தால், மாவட்ட நிர்வாகம் மூலம் உடனடியாக செய்து தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் ஆர்.டி.ஓ. துரைசாமி, தொழில் நெறி வழிகாட்டு அலுவலர் கஸ்தூரி, அரசுக்கலைக்கல்லூரி முதல்வர் அருள் ஆண்டனி, ஊட்டி அரசு கலைக்கல்லூரி பணியமர்த்தும் அலுவலர் பாலசுப்ரமணி, தாசில்தார் ராஜசேகர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.