மீனவ சமுதாய பட்டதாரிகளுக்கு இந்திய குடிமைப்பணி தேர்வுக்கான பயிற்சி
மீனவ சமுதாய பட்டதாரிகளுக்கு இந்திய குடிமைப்பணி தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் ஆகியவை இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இந்திய குடிமை பணிக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்தியேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழக அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நல வாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்பும் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த படிவங்களை உரிய ஆவணங்களுடன் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர், எண்.16, 5-வது மேற்கு குறுக்குத் தெரு, காந்திநகர், காட்பாடி, வேலூர் என்ற அலுவலக முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0416-2240329 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது adfifvellore1@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.