கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில் வழித்தடத்தை அரசிடம் ஒப்படைக்க தயார்: தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் தகவல்


கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில் வழித்தடத்தை அரசிடம் ஒப்படைக்க தயார்: தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் தகவல்
x

சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில் வழித்தடத்தை தமிழக அரசு கேட்கும்போது முழுமையாக ஒப்படைக்க தயாராக இருப்பதாக தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.

சென்னை,

மத்திய அரசு சார்பில் சிறப்பு தூய்மை பிரசார இயக்கம் கடந்த மாதம் 15-ந் தேதி தொடங்கியது. ரெயில் நிலையங்கள், கடற்கரை பகுதிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் என பல்வேறு பகுதிகளில் சமூக நல அமைப்புகள் மூலம் தூய்மை பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றது. இன்றுடன் இந்த தூய்மை பிரசார இயக்கம் முடிவு பெறுகிறது.

இந்த நிலையில், நேற்று தெற்கு ரெயில்வே சார்பில் அனைத்து ரெயில் நிலையங்களிலும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கலந்துகொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டார். இதேபோல, ரெயில்வே ஊழியர்கள், பள்ளி மாணவர்களும் இந்த தூய்மை பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரெயில் நிலையத்தின் உள்புற மற்றும் வெளிப்புற பகுதிகளை பணியாளர்கள் சுத்தம் செய்தனர். இதைத்தொடர்ந்து, கையெழுத்து இயக்கம் மற்றும் மரம் நடுதல் இயக்கத்தையும் ஆர்.என்.சிங் தொடங்கி வைத்தார். இதேபோல, பள்ளி மாணவர்களுக்கு தூய்மையை வலியுறுத்தும் வகையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒப்படைக்க தயார்

இந்தியா முழுவதும் தூய்மை பிரசார இயக்கம் தொடங்கப்பட்டதன் ஒருபகுதியாக இன்று (நேற்று) ஒரு மணி நேரம் அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 360 ரெயில் நிலையங்களில் 12 ஆயிரம் தன்னார்வலர்கள் தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று மட்டுமில்லாது நாள்தோறும் அனைத்து நாட்களிலும் இந்த தூய்மை பணியை சிறப்பாக செய்து வருகிறோம். தாங்கள் இருக்கும் பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவரிடமும் உள்ளது.

வைகை உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களின் நேரம் மாற்றப்பட்டது குறித்து மீண்டும் கலந்தாலோசித்து பயணிகளின் நலன் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுப்போம். சென்னை கடற்கரை-வேளச்சேரி மின்சார ரெயில் வழித்தடத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்க தயாராக உள்ளோம். தமிழ்நாடு அரசு எப்போது கேட்கிறதோ அப்போது பறக்கும் ரெயில் வழித்தடம் முழுமையாக ஒப்படைக்கப்படும். படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில் அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story