அரசு மானிய திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படுமா?


அரசு மானிய திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படுமா?
x
திருப்பூர்

தேங்காய் எண்ணெயின் விலையை இந்திய அளவில் நிர்ணயம் செய்யும் மையமாக திருப்பூர் மாவட்டம், காங்கயம் திகழ்ந்து வருகிறது. தேங்காய் உற்பத்தியில் பிரதான இடத்தை பிடித்த கேரள மாநிலம், கொச்சியில் தான் தேங்காய் எண்ணெய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 1980-ம் ஆண்டில் காங்கயம் பகுதிகளில் எண்ணெய் ஆலைகள் தோன்றின. தேங்காய் பருப்பு உலர்த்துவதற்கு இயல்பான பருவநிலை இங்கு உள்ளதால் தேங்காய் எண்ணெய் ஆலைகள் சிறப்பாக செயல்பட தொடங்கின.

300 தேங்காய் எண்ணெய் ஆலைகள்

1990-ம் ஆண்டில் காங்கயத்தில் உள்ள தேங்காய் எண்ணெய் ஆலைகளின் வளர்ச்சி அசுர வேகம் எடுத்தது. அதன் பிறகு கடந்த 2010-ம் ஆண்டு முதல் இந்திய அளவில் தேங்காய் எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் அளவுக்கு காங்கயம் உருவெடுத்து விட்டது. பிரபல தனியார் தேங்காய் எண்ணெய் நிறுவனங்கள் கூட தங்கள் ஆலைகளை காங்கயத்தில் அமைத்து செயல்பட்டு வருகிறது.

காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 300 தேங்காய் எண்ணெய் ஆலைகளும்,700-க்கும் மேற்பட்ட தேங்காய் உடைத்து உலர்த்தும் களங்களும் இங்கு செயல்பட்டு வருகின்றன. மேலும் தற்போது சுமார் 50 சதவீத அளவிற்கு தேங்காய் எண்ணெய் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் நடந்து வருகிறது. தேங்காய் எண்ணெய் ஆலைகள் மற்றும் தேங்காய் உடைக்கும் களங்களில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

வெளிமாநில தொழிலாளர்கள்

குறிப்பாக பீகார், ஒடிசா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், கொல்கத்தா, ஜார்கண்ட் உள்ளிட்ட வடமாநில பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்களும், தமிழகத்தின் பிற மாவட்ட பகுதிகளை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்களும் காங்கயம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இங்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களிலும் அந்தமான் தீவில் இருந்தும் தேங்காய் கொண்டு வந்து இங்கு உடைத்து பருப்பு நீக்கி அதை உலர் களங்களில் உலர்த்துகிறார்கள். பின்னர் அதை எண்ணெய் ஆலைகளுக்கு அனுப்பி வைத்து எண்ணெய் பிழிந்து விற்பனைக்காக கொண்டு செல்கிறார்கள். இங்கு தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெய் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.மேலும் டின்கள், பாட்டில்கள், பவுச்சுகளில் அடைக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் கடைகள் மூலம் விற்பனைக்கும் அனுப்பப்படுகிறது.

தினமும் ரூ.3 கோடிக்கு வர்த்தகம்

காங்கயம் என்றாலே தேங்காய் எண்ணெய் நினைவுக்கு வரும் அளவுக்கு இந்த தொழில் சிறப்பு பெற்றது. இத்தகைய சிறப்புமிக்க தேங்காய் எண்ணெய் தொழில் கடந்த சில ஆண்டுகளாக தடுமாற்றத்தை சந்தித்துள்ளது. சமையலுக்கு அதிக அளவில் பாமாயில் எண்ணெய் பயன்படுத்துவதால் தேங்காய் எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளதாக ஆலை அதிபர்கள் தெரிவித்தனர்.

காங்கயம் பகுதியில் நாளொன்றுக்கு ரூ.3 கோடிக்கு தேங்காய் எண்ணெய் வர்த்தகம் நடக்கிறது.

ஆலை அமைக்க ரூ.4¼ கோடி

பொதுவாக சிலர் தேங்காய் உடைத்து உலர்த்தும் களம் மட்டும் வைத்துள்ளனர். சிலர் தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் ஆலையும் சேர்த்து வைத்துள்ளனர். தேங்காய் உடைத்து உலர்த்தும் களம் மற்றும் எண்ணெய் தயாரிக்கும் ஆலை அமைப்பதற்கு சுமார் 5 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. தேங்காய் எண்ணெய் ஆலை (கிரஷிங் யூனிட்) மட்டும் உருவாக்குவதற்கு சுமார் 2 ஏக்கர் நிலம் போதுமானது. ஒரு சாதாரண தேங்காய் உடைத்து உலர்த்தும் களம் உருவாக்க சுமார் ரூ.50 லட்சம் தேவைப்படுகிறது. எண்ணெய் தயாரிக்கும் ஆலையும் சேர்த்து உருவாக்குவதற்கு தற்போது உள்ள நிலையில் சுமார் ரூ.4 கோடியே 30 லட்சம் செலவாகும். ஏற்கனவே 700-க்கும் மேற்பட்ட தேங்காய் களங்கள் இருந்தன. தற்போது 500-க்கும் மேற்பட்ட தேங்காய் களங்கள் உள்ளன. இதே போல் ஏற்கனவே 300-க்கும் மேற்பட்ட ஆலைகள் இருந்தன. தற்போது 200-க்கும் மேற்பட்ட ஆலைகள் மட்டுமே உள்ளன. ஆலை அமைக்க அரசு ஏற்கனவே மானியம் வழங்கியது. அது நிறுத்தப்பட்டு உள்ளது. மீண்டும் வழங்கினால் அதிகம் பேர் ஆலை அமைக்கலாம். மேலும் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்கவும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

தினமும் 1,200 டன் வரை இந்தியா முழுவதும் தேங்காய் எண்ணெய் அனுப்பப்படுகிறது என்று தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.


Next Story