தேங்காய் விலை வீழ்ச்சி
தேங்காய் விலை வீழ்ச்சி
பல்லடம்
தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தென்னை விவசாயம்
பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு நிலவும் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையால், விவசாயிகள் தென்னை விவசாயத்திற்கு மாறி வருகின்றனர். இந்த நிலையில் தென்னையில் உற்பத்தியாகும் பொருட்களை மதிப்புக் கூட்டும் தொழில்களை அரசு முறையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி அந்த தொழில்களை ஊக்குவிக்க வேண்டும் என்று தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தென்னை விவசாயி கூறியதாவது:-
தென்னை மட்டையில் இருந்து நார் எடுத்து கயிறு திரிக்கும் தொழிற்சாலைகள், தென்னை நாரில் இருந்து போம் தயாரிக்கும் தொழில்கள் போன்ற தொழில்கள் வளர்ந்து வருகின்றன. தென்னை உற்பத்தி பொருட்களில் மதிப்பு கூட்டி உற்பத்தி செய்யும் தொழில்களுக்கு அரசு முறையாக ஆய்வு செய்து உரிமம் வழங்கினால் தென்னை விவசாயிகள் பலன் அடைவார்கள்.
மஞ்சி தயாரிக்கும் மில்களுக்கு தென்னை மட்டைகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இவை மூலம் விவசாயிகளுக்கு நல்ல வருமாணம் கிடைத்து வந்தது. தற்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தென்னை நார் தொழிற்சாலையை ஆரஞ்சு பட்டியலில் சேர்த்துள்ளது. இதனால் மில்களில் தென்னை மட்டை வாங்குவது குறைந்து, தேங்காய் மட்டை விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஒரிரு மாதங்களுக்கு முன்பு ஒரு தென்னை மட்டையின் விலை ரூ.2.50க்கு விற்பனையானது. தற்போது 50 பைசாவிற்கு மட்டுமே விற்பனையாகிறது. தென்னை மட்டை விலை சரிவால் தேங்காய் விலையை ஒரு ரூபாய் விலை குறைத்து கேட்கின்றனர்.
தேங்காய் விலை
இதனால் விவசாயிகளுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது ஒரு தேங்காய் ரூ.9 முதல் ரூ.11 வரை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.அரசு கொப்பரை மையங்களில் கொப்பரை கிலோ ரூ.105.90 பைசாவிற்கு கொள்முதல் விலை நிர்ணயம் செய்து தென்னை சாகுபடி விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த ஆதார விலையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.
ஒரு கிலோ தேங்காய் தொட்டி ரூ.9க்கு மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்
----