தேங்காய் விலை கடும் வீழ்ச்சி
தஞ்ைச மாவட்டத்தில் தேங்காய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
சேதுபாவாசத்திரம்;
தஞ்ைச மாவட்டத்தில் தேங்காய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
தேங்காய் உற்பத்தி
தஞ்சை மாவட்டத்தில், சாகுபடி செய்யப்படும் தேங்காய் தரம் காரணமாக உலக அளவில் சிறப்பு பெற்றது. இந்தியாவில் கேரளாவுக்கு அடுத்தபடியாக தமிழகம் தேங்காய் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது.தஞ்சை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக டெல்டா விவசாயிகளின் 2-வது மிகப்பெரிய வாழ்வாதாரமாக விளங்கிவரும் தென்னை சுமார் 60 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சேதுபாவாசத்திரம், பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதியில் விளையும் தேங்காய்கள் அதன் அளவு, சுவை, மனம் போன்றவைகள் மூலம் பெயர் பெற்றுள்ளது.
கஜா புயல்
உலக அளவில் சிறப்பு பெற்ற இப்பகுதி தேங்காய்கள், புகழ்பெற்ற பிஸ்கட் கம்பெனிகள், எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விருப்பமாக உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலில், சேதுபாவாசத்திரம் பகுதியில் மட்டும் 1.50 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தேங்காய் மூலம் வருவாயின்றி விவசாயிகள் தடுமாறி வந்தனர்.தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக உற்பத்தி அதிகரிக்க தொடங்கி, இழப்பில் இருந்து, மீண்டு வந்தனர். இந்தநிலையில் கேரளா போன்ற வெளி மாநிலங்களிலும், பொள்ளாச்சி போன்ற வெளி மாவட்டங்களிலும் இதேபோல் உற்பத்தி அதிகரித்துள்ளது.இதனால் இப்பகுதியில் ஏற்றுமதி நின்று விட்டது. எனவே வாங்கிய தேங்காயை விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகளும் உற்பத்தியான தேங்காயை விவசாயிகள் விற்பனை செய்ய முடியாமலும் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
விலை சரிவு
பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம், பேராவூரணி பகுதியில் இருந்து ஒரு நாளில் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலமாக சென்னை, காங்கேயம், வெள்ளக்கோயில் போன்ற பகுதிகளுக்கும், கர்நாடகா, ஆந்திரா, மும்பை போன்ற வெளி மாநிலங்களுக்கும், விற்பனைக்காக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தேங்காய்கள் கொண்டு செல்லப்படும். ஆனால் தற்போது ஏற்றுமதி நின்றுவிட்டது.இதனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ரூ.30-க்கு விற்கப்பட்ட தேங்காய் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ரூ.20- ஆக குறைந்தது. ஆனால், தற்போது விற்பனையின்றி கிடுகிடுவென விலை சரிந்து ரூ.8 முதல் ரூ.10- ஆக குறைந்து உள்ளது.
பாதிப்பு
எனவே வெட்டிய தேங்காய்களை விற்பனை செய்ய முடியாமல் தோப்புகளிலும், தேங்காய் வெட்ட முடியாமல் மரங்களிலும் கிடக்கிறது.இதனால் தென்னை விவசாயிகள் மட்டுமின்றி, தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள், தேங்காய் வெட்டும் தொழிலாளர்கள், கொப்பரை காய வைப்போர் உட்பட பலரும் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.அரசு நெல்லுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்வது போல தேங்காய்க்கும் உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொப்பரைத் தேங்காயை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம், கூடுதலாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிற்சாலைகள்
நெல், கரும்புக்கு தருவது போல, தென்னைக்கும் அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். பேராவூரணி - பட்டுக்கோட்டை பகுதியை மையமாக வைத்து, தென்னை சார்ந்த நவீன தொழிற்சாலைகளை உருவாக்கி, தேங்காய் பால், தேங்காய் துருவல், தேங்காய் பருப்பு, தேங்காய் எண்ணெய், சோப்பு, தேங்காய் சிரட்டையில் இருந்து கார்பன் தயாரிப்பு, மிதியடி, கலைப்பொருட்கள் தயாரித்து சந்தைப்படுத்த வேண்டும்.ஜவுளி பூங்கா போல, தென்னை பூங்கா அமைத்து தென்னை விவசாயத்தை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை உற்பத்தி பொருட்களை தயாரிக்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் பாமாயில் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.