காபி-டீக்கடைகளுக்கு மானிய விலையில் கியாஸ் சிலிண்டர்கள் வழங்க வேண்டும் - வெற்றிலை, பாக்கு, பீடி, சிகரெட் வர்த்தக சங்கம் வலியுறுத்தல்
மானிய விலையில் கியாஸ் சிலிண்டர்கள் வழங்க வேண்டும் என மதுரையில் நடந்த வெற்றிலை, பாக்கு, பீடி, சிகரெட் வர்த்தக சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மானிய விலையில் கியாஸ் சிலிண்டர்கள் வழங்க வேண்டும் என மதுரையில் நடந்த வெற்றிலை, பாக்கு, பீடி, சிகரெட் வர்த்தக சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆண்டு விழா
மதுரை வெற்றிலை, பாக்கு, பீடி, சிகரெட் (காபி- டீக்கடைகள் உள்பட) வர்த்தக சங்கத்தின் 79-வது ஆண்டு விழா தெப்பக்குளம் பகுதியில் உள்ள சந்திர குழந்தை திருமண மகாலில் நேற்று நடந்தது. சங்க தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் பொதுச்செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் அய்யாதுரை வரவேற்றார். சங்க பொருளாளர் சோலைராஜ் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். துணை தலைவர் திருப்பதி தீர்மானங்களை நிறைவேற்றி பேசினார்.
சிறப்பு விருந்தினர்களாக மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், பூமிநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், துணை செயலாளர்கள் செல்வக்குமார், ரவிசந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு வழிவகை செய்த, மத்திய- மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மதுரை வெற்றிலை, பாக்கு, பீடி, சிகரெட், காபி-டீக்கடைகள் போன்ற சிறு வியாபாரிகளின் குழந்தைகளுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் முன்னுரிமை அளித்து தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும். தற்போது விலைவாசி கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் சிறு வியாபாரிகளுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்த்திட வேண்டும், நதிகளை தேசியமயமாக்க வேண்டும், சிறு வியாபாரிகளுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும்.
இதுபோல் நலிந்த நிலையில் உள்ள காபி-டீக்கடைகளின் உரிமையாளர்களுக்கு மானிய விலையில் கியாஸ் சிலிண்டர்களை வழங்க வேண்டும். அதுபோல், பெட்டிக்கடைகள், காபி, டீக்கடைகளுக்கு மின்சார கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் என்பது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.