கோவை: போதை மாத்திரை விற்ற கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது
கோவையில் மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரையை விற்ற கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
sகோவை,
கோவை ரத்தினபுரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள டாடாபாத் 9-வது வீதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு 3 பேர் நின்றிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
உடனே போலீசார் துரத்திச்சென்று அந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் 3 பேருமே கல்லூரியில் படித்து வருவது தெரியவந்தது. அத்துடன் வலிநிவாரணத்துக்கு பயன்படுத்தும் மாத்திரையை தண்ணீரில் கரைத்து அதை ஊசி மூலம் சக மாணவர்களுக்கு ஏற்றி வருவதும் தெரியவந்தது. இதற்காக ஒரு ஊசியை உடலில் ஏற்ற அதிகளவில் பணம் வசூலித்ததும் தெரியவந்தது.
அத்துடன் இந்த மாத்திரையை சிங்காநல்லூரில் மருந்து கடை நடத்தி வரும் கரிகாலன் (49) என்பவர் டாக்டரின் அனுமதி சீட்டு இல்லாமல் மாணவர்களுக்கு சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 17 வயதான மாணவர் மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பைவோன் ஸ்பாஸ் பிளஸ் என்ற வலிநிவாரண மாத்திரையான 1,512 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர் அவர்கள் 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அதில் 17 வயதான மாணவர் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியிலும், மற்ற 3 பேரை கோவை மத்திய சிறையிலும் அடைத்தனர்.