நீலகிரி மாவட்ட பழங்குடியினருக்கு வேளாண் மேம்பாட்டு தொழில் நுட்பங்கள் கற்றுத் தர நடவடிக்கை-கோவை வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் உறுதி
நீலகிரி மாவட்ட பழங்குடியின மக்களுக்கு வேளாண் தொழில்நுட்பங்கள் கற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கூறினார்.
ஊட்டி
நீலகிரி மாவட்ட பழங்குடியின மக்களுக்கு வேளாண் தொழில்நுட்பங்கள் கற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கூறினார்.
ஆலோசனைக் குழு கூட்டம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், நீலகிரி மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் முதலாவது அறிவியல் ஆலோசனை குழுக் கூட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டி தொட்டபெட்டா வேளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வந்தவர்களை திட்ட ஒருங்கிணைப்பாளர் தாமரைசெல்வி வரவேற்றார். ஐதராபாத் வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் ஷேக் மீரா, தோட்டக்கலை இணை இயக்குநர் கருப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தேசிய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் ஒப்புதலோடு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நீலகிரி மாவட்டத்தில் வேளாண் அறிவியல் நிலையமானது புதிதாக கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. இந்த வேளாண்மை அறிவியல் நிலையம், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையங்களுக்கும், விவசாய பெரு மக்களுக்கும் இடையே ஒரு பாலமாக அமைவதோடு புதிய ரகங்களின் சாகுபடி தொழில்நுட்பங்கள், பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்பு கூட்டுதல் ஆகியவைகளை வயல்வெளி ஆய்வு, முதல்நிலை செயல்விளக்கம் மற்றும் பயிற்சிகள் மூலம் விவசாய பெருமக்களுக்கு கொண்டு சேர்க்கிறது.
தோட்டக்கலை பயிர்கள்
தமிழ்நாட்டில் மலை மாவட்டங்களில் இயங்கும் ஒரே வேளாண்மை அறிவியல் நிலையம் இதுவாகும். இங்கு வேளாண்மையின் அங்கங்களான தோட்டக்கலை, பயிர் நுண்ணுயிரியல், பயிர் பாதுகாப்பு, வேளாண் விரிவாக்கம், சுற்றுப்புறச் சூழலியல் மற்றும் வனவியல் போன்ற வல்லுநர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தற்போது பண்ணையில் பயிர் சாகுபடி முறைகள், நாற்றங்கால் தொழில்நுட்பங்கள், உயிரி உரங்கள் தயாரிப்பு முறைகள், காளான் சாகுபடி தொழில்நுட்பங்கள் ஆகியவை செயல்விளக்க திடல்களாக உருவாக்கப்பட்டு உள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் 56 சதவீதம் வனங்களும், 14 சதவீதம் குடியிருப்புகளாகவும் உள்ளது. மீதமுள்ள 30 சதவீதம் அதாவது 80 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை மற்றும் காய்கறிகள், தோட்டக்கலை பயிர்கள் பயிரிடப்படுகிறது. இந்த மாவட்டத்தில் காலநிலை மாறுபாடு மிக அதிகமாக அதாவது வெப்பநிலை குறைந்தபட்சம் 5 டிகிரி செல்சியஸ் முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை உள்ளதால், அதற்கு தகுந்தார் போல் பயிர்களும் அதில் ஏற்படும் பிரச்சினைகளும் மாறுபடுகின்றன. பழங்குடியினருக்கு வேளாண் ஆலோசனைகளும், வாழ்வியல் மேம்பாட்டு தொழில்நுட்பங்களும் வழங்கப்படும். தோட்டக்கலை பயிர்களின் மதிப்பு கூட்டுதல், தொழில்நுட்பங்கள் சார்ந்த பயிற்சிகள் மற்றும் தொழில்முனைவோர் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும். தற்போது இயற்கை வேளாண்மை முறைகள் முக்கியத்துவம் பெற்று வருவதால் அத்தகைய கள ஆய்வுகள், செயல்விளக்க திடல்கள், அதனை சார்ந்த தொழில்நுட்ப ஆலோசனைகளும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். எனவே விவசாயிகள் இந்த வேளாண்மை அறிவியல் நிலையத்தின் செயல்பாடுகளுடன் இணைந்து பயன்பெற வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.
இதில் விவசாயிகள், பல்வேறு துறை சார் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.