கோவை கார் வெடி விபத்து - சம்பவ இடத்தில் தடயவியல் துறையினரின் நடத்தி வந்த சோதனை நிறைவு
கோவை அருகே இன்று அதிகாலை 4.10 மணிக்கு திடீரென கார் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
கோவை,
கோவை மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தெருவில் பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலை மையமாக வைத்து இந்த தெருவும் ஈஸ்வரன் கோவில் வீதி என்றே அழைக்கப்படுகிறது.
இன்று அதிகாலை 4.10 மணிக்கு இந்த வீதியில் நுழைந்த ஒரு கார் கோவில் வழியாக சென்றது. கோவில் முன்புள்ள வேகத்தடையில் ஏறி இறங்கியபோது திடீரென கார் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது கார் 2 துண்டாக உடைந்து கிடந்தது. மேலும் காரில் தீ மளமளவென பற்றி எரிந்தது. அருகில் செல்ல முடியாதவாறு தீப்பற்றி எரிந்ததால் பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காருக்குள் ஒருவர் உடல் கருகி இறந்து கிடந்தார். அங்கு உக்கடம் போலீசாரும் விரைந்து வந்தனர். அவர்கள் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டனர். உடல் கருகி இறந்து கிடந்தவரின் சடலத்தை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தீப்பிடித்து எரிந்த காரில் 2 சிலிண்டர்கள் இருந்தது. அந்த 2 சிலிண்டர்களும் கருகிய நிலையில் காணப்பட்டன.
கார் பற்றி விசாரித்தபோது அந்த கார் சென்னை பதிவெண்ணை கொண்டு இருந்தது. கார் யாருக்கு சொந்தமானது என்பது பற்றி விசாரித்தபோது அது பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், கோவை கார் வெடி விபத்து சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்தில் சுமார் 11 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த தடயவியல் துறையினர் சோதனை தற்போது நிறைவு பெற்றுள்ளது. வெடித்து சிதறிய காரின் பாகங்களை மேல் விசாரணைக்காக தார்பாலின் மூடி போலிசார் எடுத்துச் சென்றனர். சோதனை முடிவையடுத்து காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த நபர் யார் ?... யாருடைய கார்? என்பது குறித்த அனைத்தும் தெரியவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.