கொலையாளிகளை மடக்கி பிடித்த நீலகிரி மாவட்ட போலீசாருக்கு, கோவை போலீஸ் கமிஷனர் பாராட்டு
கோவையில் கோர்ட்டு வளாகத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளை மடக்கி பிடித்த நீலகிரி போலீசாருக்கு கோவை போலீஸ் கமிஷனர் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஊட்டி
கோவையில் கோர்ட்டு வளாகத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளை மடக்கி பிடித்த நீலகிரி போலீசாருக்கு கோவை போலீஸ் கமிஷனர் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ரவுடி கொலை
கோவை மாவட்டம் கோவில்பாளையம் லட்சுமி நகரை சேர்ந்த கோகுல் (வயது 22) கடந்ந 3 நாட்களுக்கு முன் ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக கோவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் ஆவதற்காக தனது நண்பர் மனோஜ் என்பவருடன் வந்தார். கோர்ட்டில் கையெழுத்து போட்டு விட்டு திரும்பிய போது, கோர்ட்டின் பின்புறம் 4 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி கோகுலை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டது.
இந்த நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் செல்போன் சிக்னல் ஊட்டி சுற்றுப்புற பகுதியில் காட்டியதால் நீலகிரி போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
பாராட்டு
இதனால் அவர்களைப் பிடிக்க நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகள் மற்றும் முக்கிய சாலைகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வந்தவர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
இதை தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்து தப்பிக்க முயன்ற குற்றவாளிகளை கோத்தகிரி பகுதியில் வைத்து நீலகிரி போலீசார் கைது செய்தனர். இதன் பின்னர் கோவை போலீசார் அவர்களை கோவைக்கு அழைத்து சென்றனர்.
இந்த நிலையில் கொலையாளிகளை மடக்கிப் பிடித்த நீலகிரி இன்ஸ்பெக்டர்கள் மணிக்குமார், வேல்முருகன், கவிதா, சரவணகுமார் சப் இன்ஸ்பெக்டர்கள் கனகராஜ், விஸ்வநாதன், வின்சென்ட், முகைதீன், போலீஸ்காரர்கள் பிரபு, பிரேம் ஆகியோரை பாராட்டி கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சான்றிதழ் வழங்கினார்.