தஞ்சை மாவட்டத்தில் குளிர்ந்த காற்று வீசியது
தஞ்சை மாவட்டத்தில் குளிர்ந்த காற்று வீசியது
மாண்டஸ் புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கினர். சாலைகள் வெறிச்சோடின.
மாண்டஸ் புயல்
வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் நேற்றுஇரவு கரையை கடந்தது.
வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவானதைதொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று இரவு வரை லேசான மழை பெய்தது. மேலும் கடந்த 2 நாட்களாக இரவு மட்டுமின்றி பகல் நேரத்திலும் குளிர்ந்த காற்று வீசியது. குளிர் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் பலரும் வீடுகளிலேயே முடங்கினர். அத்தியாவசிய பணிகளுக்காக இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் கூட குளிரில் நடுங்கியபடியே பயணத்தை மேற்கொண்டனர்.
மக்கள் நடமாட்டம் குறைவு
மழை மற்றும் குளிர்ந்த காற்று காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. மார்க்கெட்டிற்கு வழக்கத்தைவிட குறைவான அளவே மக்கள் வந்து சென்றனர். பஸ்களிலும் குறைந்த அளவே பயணிகள் பயணம் செய்தனர். மாண்டஸ் புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்துக்கு அரகோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் 25 பேர் வந்தனர்.
அவர்கள் பட்டுக்கோட்டை பகுதிகளுக்கு உபகரணங்களுடன் சென்று தயார் நிலையில் உள்ளனர். மாவட்டத்தில் புயல் பாதிப்பு தொடர்பான தகவல்களை தெரிவிக்க அனைத்து பகுதிகளிலும் குழுக்கள் அமைத்து, அதன் மூலம் தகவலை விரைந்து தந்திட வேண்டும் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதேபோல் நெடுஞ்சாலைத்துறையினர் முக்கிய சாலையில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய மரங்களை கண்டறிந்து அதனை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.