பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக உரிய நடவடிக்கை


பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக உரிய நடவடிக்கை
x

பொது மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் உறுதி அளித்தார்.

ராமநாதபுரம்

பரமக்குடி,

பொது மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் உறுதி அளித்தார்.

கிராமசபை கூட்டம்

பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெல் மடூர் ஊராட்சி நல்லூர் கிராமத்தில் மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கிஸ் தலைமை தாங்கினார். பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், நெல்மடூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கிராம மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், திட்டங்கள் குறித்தும் பேசினர்.

அப்போது அவர்களுக்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பேசுகையில், ஊராட்சியின் வளர்ச்சிக்கு ஏற்ப மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு தேவையான புதிய திட்டங்களை பெறுவதற்கு இந்த கிராம சபையின் ஒப்புதல் மிக முக்கியமானதாகும்.

பொது மக்களின் கோரிக்கைகள் குறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நல்லூர் கிராம பாசன கண்மாய் தூர்வாரும் பணி மற்றும் மடை கட்டும் பணி வரும் நிதி ஆண்டில் சிறப்பு கவனம் எடுத்து செயல்படுத்தப்படும். ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டுதல்,பேவர் பிளாக் தளம் அமைத்தல் ஆகியவை சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் கட்டி தரப்படும். அதேபோல் ஊராட்சியில் உள்ள ஆக்கிரமிப்புகள் வட்டாட்சியர் மூலம் அகற்றப்படும்.

சுகாதாரக்கேடு

நெல்மடூர் ஊராட்சி பகுதியில் பிற ஊராட்சிகளை சேர்ந்த குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக தெரிகிறது. வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் அது தொடர்பான ஊராட்சிகளை அழைத்து பேசி குப்பைகளை அந்தந்த பகுதிகளில் கொட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

இதில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் பரமசிவன், பரமக்குடி ஆர்.டி.ஓ. முருகன், மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன், பரமக்குடி தாசில்தார் தமிம் ராஜா, பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரமோகன், பரமக்குடி வட்ட வழங்கல் அலுவலர் ஆண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story