அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு விழா


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு விழா
x
திருப்பூர்


தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு விழாவில் அமைச்சர் கயல்விழி கலந்துகொண்டார்.

கல்லூரி ஆண்டு விழா

தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு விழா தாராபுரம் அரிமா சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் பத்மாவதி தலைமை தாங்கினார். வணிகவியல் பேராசிரியை புஷ்பலதா வரவேற்றார். திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில் குமார், நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன், மூலனூர் பேரூராட்சி துணைத் தலைவர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது கல்லூரியில் விளையாட்டு போட்டி மற்றும் படிப்பில் முதலாவதாக வந்த மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்களை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.

அப்போது அமைச்சர் பேசியதாவது:-

முதல்-அமைச்சருக்கு நன்றி

தாராபுரத்தில் கடந்த 50 ஆண்டு கால பொது மக்களின் கனவு தாராபுரத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்ற தி.மு.க. அரசு தாராபுரத்திற்கு அரசு கலைக்கல்லூரி கட்டாயம் வேண்டும் என சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்த போது முதல் கூட்டத்திலேயே தாராபுரத்திற்கு அரசு கல்லூரி தொடங்க உத்தரவிட்டார். அதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் இந்த விழாவில் ஏழை எளிய மாணவர்களுக்கு வெளியூர் சென்று பல்வேறு பிரச்சினைகளை சந்திக்காமல் உள்ளூரிலேயே படித்து பட்டம் பெரும் வாய்ப்பை இந்த கல்லூரி உருவாகியுள்ளது. இந்த வாய்ப்பினை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் கல்லூரி மாணவ, மாணவிகள் செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்தாமல் தங்கள் கவனத்தை சிதறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது கல்லூரி வளர்ச்சி குழு தலைவர் டாக்டர் தங்கராஜ், செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் ரோட்டரி முத்துராமலிங்கம் மற்றும் நேதாஜி பாலசந்தர், ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவர் சாரதாஸ் எஸ்.சண்முகவேல், அரிசி ஆலை உரிமையாளர் சங்க தலைவர் ஜானகி சிவராமன், செயலாளர் கந்தவிலாஸ் பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் முதல் ஆண்டு மாணவி குழலி நன்றி கூறினார்.


Next Story