மக்களின் வளர்ச்சி, முன்னேற்றத்துக்காக செயல்படுவேன்


மக்களின் வளர்ச்சி, முன்னேற்றத்துக்காக செயல்படுவேன்
x
திருப்பூர்


திருப்பூர் மாவட்ட வளர்ச்சி, முன்னேற்றத்துக்கு எனது செயல்பாடு இருக்கும் என்று புதிய கலெக்டராக பொறுப்பேற்ற கிறிஸ்துராஜ் உறுதி கூறினார்.

கலெக்டர் கிறிஸ்துராஜ்

திருப்பூர் மாவட்ட கலெக்டராக இருந்த வினீத், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சேலம் மாநகராட்சி ஆணையாளராக இருந்த கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டராக கிறிஸ்துராஜ் பொறுப்பேற்றுக்கொண்டார். தனது அறையில் உள்ள மேஜையை தொட்டு வணங்கி அவர் இருக்கையில் அமர்ந்தார். உடன் அவருடைய மனைவி வந்திருந்தார். பின்னர் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெய்பீம் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மாவட்டத்தின் முன்னேற்றம்

பின்னர் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பூர் கலெக்டர் என்ற மிகப்பெரிய பொறுப்பையும், கடமையையும் வழங்கிய தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் அனைவரும் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றோம்.

முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் எனது செயல்பாடு அமையும். அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மேயர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் வழிகாட்டுதலுடன் பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலர்களின் ஒருங்கிணைப்புடன் திருப்பூர் மாவட்ட மக்களின் நல்ஆதரவுடன் மாவட்ட நிர்வாகத்தை சிறப்பாக வழிநடத்திச்செல்வேன். திருப்பூர் மாவட்ட வளர்ச்சிக்காவும், முன்னேற்றத்துக்காகவும், அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் எனது செயல்பாடு இருக்கும் என்று உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவை மாவட்ட வருவாய் அதிகாரி

கலெக்டர் கிறிஸ்துராஜ் (வயது 47) சென்னையை சேர்ந்தவர். எம்.எஸ்சி. கணிதம் படித்துள்ளார். குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த 2005-ம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உதவி கலெக்டராக பயிற்சி பெற்றார். 2006-ம் ஆண்டு நாகப்பட்டினம் ஆர்.டி.ஓ.வாகவும், 2008-ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் (பொது), 2009-ம் ஆண்டு சிப்காட் சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

2010-ம் ஆண்டு சென்னை தேர்தல் பிரிவு மாவட்ட வருவாய் அதிகாரியாகவும், 2011-ம் ஆண்டு கரூர் மாவட்ட வருவாய் அதிகாரியாகவும், 2014-ம் ஆண்டு கோவை மாவட்ட வருவாய் அதிகாரியாகவும், 2017-ம் தமிழ்நாடு இணை நெறிமுறை அதிகாரியாகவும், 2020-ம் ஆண்டு தமிழ்நாடு கடல்வழி துணை தலைவராகவும் பணியாற்றினார். 2021-ம் ஆண்டு முதல் சேலம் மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றியுள்ளார்.


Next Story