ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை பயோ டீசலாக மாற்ற 2 லட்சம் லிட்டர் சேகரிப்பு -உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை


ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை சேகரித்து பயோ டீசலாக மாற்றம் செய்யும் ரூகோ திட்டத்தில் மதுரை மாவட்டத்தில் 2 லட்சம் லிட்டர் எண்ணெய் சேகரிக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

மதுரை


ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை சேகரித்து பயோ டீசலாக மாற்றம் செய்யும் ரூகோ திட்டத்தில் மதுரை மாவட்டத்தில் 2 லட்சம் லிட்டர் எண்ணெய் சேகரிக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

சமையல் எண்ணெய்

ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தினால், அது கருப்பு நிறத்தில் மாறுகிறது. அதன் பின்னரும், அதனை பயன்படுத்தும்பட்சத்தில், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவதற்கு காரணமாகிறது.

இந்த எண்ணெய்யை, மறுமுறை பயன்படுத்தாமல் இருக்க அந்த எண்ணெய்யை சேமித்து, பயோ டீசலாக மாற்றுவதற்கு ரூகோ(சமையல் எண்ணெய் மறுசுழற்சி செய்தல்) திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் உணவகங்கள், உணவு நிறுவனங்களில் சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மீண்டும் சமையலுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வழிவகை செய்யப்படுகிறது.

பயோ டீசல்

கடை நிறுவனங்கள், ஓட்டல்களில் ஒருமுறை சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை உணவு பாதுகாப்பு துறையின் அங்கீகாரம் பெற்ற ஏஜென்சிகள் சேகரிக்கின்றன. அதன் பின்பு அந்த எண்ணெய், பயோ டீசலாக மாற்றம் செய்யப்பட்டு, விமானங்கள், லாரிகளுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.

மதுரை மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் லிட்டர் சமைக்கப்பட்ட எண்ணெய் வணிகர்களிடம் இருந்து பெறப்பட்டு பயோ டீசலாக மாற்றம் செய்யப்படுகிறது.

அதிகாரி கூறுவது என்ன?

இதுகுறித்து மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ஜெயராமபாண்டியன் கூறியதாவது:-

ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும், மீண்டும் பயன்படுத்துவதால், உடலுக்கு பல்வேறு பாதிப்பு வருகிறது. இதனை தவிர்ப்பதற்காக ரூகோ திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் மூலம், மதுரையில் உள்ள கடைகளில் எண்ணெய் சேகரிக்கும் ஏஜென்சியை சேர்ந்தவர்கள் எண்ணெய் சேகரிக்கிறார்கள். அதற்கென தனி குழு, உணவு பாதுகாப்புத்துறையுடன் இணைந்து செயல்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் எண்ணெய்க்கு, ஒரு லிட்டருக்கு எண்ணெயின் தரத்தை பொறுத்து ரூ.35 முதல் ரூ.40 வரை வழங்குகிறார்கள்.

2 லட்சம் லிட்டர்

மதுரை மாவட்டத்தில் கடந்த 2022 டிசம்பர் மாதம் வரை உணவு பாதுகாப்புத்துறையின் ஒத்துழைப்புடன் சுமார், 1 லட்சத்து 93 ஆயிரத்து 699 லிட்டர் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய், உணவு வணிகர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

இதுபோல், கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் மதுரையில் 8 ஆயிரம் லிட்டர் எண்ணெய் ரூகோ திட்டத்தின் கீழ் சேகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரையில் இதுவரை மொத்தமாக 2 லட்சம் லிட்டர், ஒரு முறை சமைக்கப்பட்ட எண்ணெய் சேகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்படும் எண்ெணய் மொத்தமாக, ஏஜென்சிகள் மூலம் பெரு நகரங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு அங்குள்ள தொழிற்சாலைகள் மூலம் பயோ டீசலாக மாற்றம் செய்யப்படுகிறது. மதுரை மாவட்டத்தை பொறுத்தவரையில், கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், பேக்கரிகள், உணவு நிறுவனங்களிடம் இருந்து ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய் சேகரிக்கப்பட்டு வருகிறது.

மீனாட்சி அம்மன் கோவில்

உணவு நிறுவனங்கள் மட்டுமின்றி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும், ஒருமுறை பிரசாதங்கள் செய்யப்பட்ட பின்பு மீதமாகும் எண்ணெய் சேகரிக்கப்படுகிறது. இந்த திட்டம் மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. மதுரையில் உள்ள மற்ற முக்கிய கோவில்களிலும் இந்த திட்டத்தை கொண்டு செல்வதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தில் மதுரையில் உள்ள அனைத்து கடைகளும், உணவு நிறுவனங்களும் தங்களை இணைத்து கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கும் இதில் அதிக விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story