கோவில் திருவிழா பெயரில் அனுமதியின்றி பல லட்சம் ரூபாய் வசூல்
குமரி மாவட்டத்தில் கோவிலில் சித்திரை திருவிழா என்ற பெயரில் அனுமதியின்றி பல லட்சம் ரூபாய் வசூலித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி கலெக்டரிடம் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் மனு கொடுத்தனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கோவிலில் சித்திரை திருவிழா என்ற பெயரில் அனுமதியின்றி பல லட்சம் ரூபாய் வசூலித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி கலெக்டரிடம் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் மனு கொடுத்தனர்.
மக்கள் குறைதீர்க்கும் முகாம்
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இதேபோல் நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள லூயி பிரெயிலி கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. முகாமுக்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கினார். அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.
குமரி மாவட்ட விசுவ இந்து பரிஷத் மாவட்ட இணைச் செயலாளர் செந்தில்குமார் தலைமையில் மாநில நிர்வாகி காளியப்பன் உள்பட பலர் நேற்று கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நடவடிக்கை
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் கோவிலின் பெயரை சொல்லியோ, அந்த கோவிலின் தெய்வங்களின் பெயரைச் சொல்லியோ தனி நபர்கள், சங்கங்கள் யாரும் பண வசூல் செய்யக்கூடாது என்பது அறநிலையத்துறையின் சட்டம். இந்தநிலையில் சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்த சிலர் சுசீந்திரம் கோவில் சித்திரை திருவிழாவை காரணம் காட்டி பொதுமக்களிடமும், பக்தர்களிடமும் பல லட்சம் ரூபாய் பணத்தை வசூல் செய்ததாக பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக சுசீந்திரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியபிள்ளை என்பவர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு எழுத்து பூர்வமாக புகார் கொடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட நபர்கள் குமரி மாவட்டத்தின் முக்கிய கோவில்களான திருவட்டார், மண்டைக்காடு, நாகராஜாகோவில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் போன்ற கோவில் திருவிழா காலங்களில் பக்தர்களிடமும், பொதுமக்களிடமும் வசூல் செய்து வருவதாக தெரிய வருகிறது. இதுகுறித்து விசாரித்து ஆன்மிகத்தின் பெயரைச் சொல்லி பணம் வசூல் செய்யும் கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மண்பாண்ட தொழிலாளர்கள்
குமரி மாவட்ட மண்பாண்ட குடிசைத் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் சுகுமாரன், செயலாளர் கோபி, நிர்வாகிகள் பகவதீஸ்வரன், ரெவி, கிருஷ்ணன் உள்ளிட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் சுமார் 500 குடும்பத்தினர் மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம். தொழிலுக்கு தேவையான களிமண் எடுக்க அனுமதி வேண்டி பல முறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே உடனடியாக மண் எடுக்க அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு மைதானம்
தடிக்காரன்கோணம் பத்மநாபன் நகரைச் சேர்ந்த 12-வது வார்டு கவுன்சிலர் அஜன் கெலிடர் என்பவர் தலைமையில் சிலர் நேற்று கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தடிக்காரன்கோணம் பகுதியில் இளைஞர்கள் விளையாட்டு மைதானமாகவும், தினசரி சந்தைக்கு செல்வதற்கு பாதையாகவும் இருந்த இடத்தை வனத்துறையினர் சுற்றி வேலி அமைத்து ஒரு ஆண்டு காலம் ஆகிறது. ஊர் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து பல போராட்டம் நடத்தியும் எங்களுக்கு எந்த ஒரு சரியான பதிலும், இடமும் கிடைக்கவில்லை. எங்கள் ஊரில் வேறு மைதானம் எதுவும் கிடையாது. இந்த மைதானம் சீருடைப் பணியாளருக்கான உடல்தகுதியை வளர்த்து கொள்வதற்கு பயன்பட்டு வந்தது. எங்கள் ஊரில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் மற்றும் கைப்பந்து குழுக்கள் உள்ளன. தற்போது இவர்களுக்கு விளையாட எந்த மைதானமும் கிடையாது. இதனால் இளைஞர்கள் போதை, கஞ்சா போன்ற உடலை பாதிக்கக்கூடிய விஷயங்களில் பழகி வரும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் செல்போன்களை பயன்படுத்தி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். இதனால் மனச்சோர்வு, உடல் சோர்வு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, பொதுமக்கள் பயன்படுத்தி வந்த மைதானம் மீண்டும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மைதானம் கிடைக்காத பட்சத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாம்பு பிடிக்க அனுமதி
அருமநல்லூர் காந்திநகரை சேர்ந்த ஓய்வுபெற்ற வன ஊழியரும், சமூக ஆர்வலருமான சுந்தரதாஸ் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 30 ஆண்டுகளாக வனத்துறையில் பாம்பு பிடிப்பதற்காக நியமிக்கப்பட்டு என்னால் இயன்ற அளவில் மக்களை அச்சுறுத்தும் பாம்புகளை பிடித்து காட்டில் கொண்டு விட்டு வந்தேன். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்றேன். நான் ஏற்கனவே மக்கள் விருதும், அரசிடம் இருந்து 2 முறை அரசு விருதும் பெற்றுள்ளேன். எனக்கு அனுமதி வழங்கினால் மக்களை காப்பாற்றவும், வன விலங்குகளை காப்பாற்றவும் சமூக சேவையாக பாம்புகளை பிடிக்க முடிவு செய்துள்ளேன். எனவே எனது பணி குறித்து வனத்துறையிடம் விசாரித்து தொடர்ந்து வனத்துறை ஒத்துழைப்புடன் சமூக சேவையாக நான் இதனைத் தொடர்ந்து செய்திட உரிய அனுமதி வழங்க கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கை துண்டிப்பு
நாகர்கோவில் ஓட்டுப்புரைத் தெரு இந்திரா நகரைச் சேர்ந்த ஜேம்ஸ்தாசன் என்பவர் வக்கீல் அனிட்டர் ஆல்வின் உள்ளிட்டோருடன் சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தார். அதில், 'நான் கடந்த ஜனவரி மாதம் 26-ந் தேதி கூலித் தொழில் செய்து கொண்டிருக்கும்போது தவறுதலாக எனது இடது கை கரும்பு எந்திரத்தில் சிக்கி துண்டிக்கப்பட்டது.
இதனால் எந்தவொரு கூலி வேலையும் செய்ய முடியவில்லை. எனவே தாங்கள் கருணை அடிப்படையில் எனக்கு ஏதேனும் வேலைவாய்ப்பை உருவாக்கி தந்து எனது குடும்பத்தை கஷ்டத்தில் இருந்து மீட்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்' என எனக்கூறப்பட்டுள்ளது.