ரூ.1 கோடி வசூலிப்பு; அரசு வேலை என 16 பேருக்கு போலி ஆணை வழங்கி மோசடி
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1 ேகாடி பெற்று 16 பேருக்கு போலி ஆணை வழங்கி மோசடி செய்த தம்பதி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1 ேகாடி பெற்று 16 பேருக்கு போலி ஆணை வழங்கி மோசடி செய்த தம்பதி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ரூ.1 கோடி மோசடி
விருதுநகர் பெத்தனாட்சி நகரை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி மைதிலி.
சிவகாசியை சேர்ந்த முருகன் என்ற முருகதாஸ் (வயது 52) என்பவருக்கு சிவகாசியை சேர்ந்த மாரிமுத்து மற்றும் சாமிநத்தத்தை சேர்ந்த முருகன் ஆகியோர் மூலம் அசோக் குமார் அறிமுகமானார். அசோக் குமார் பல நபர்களுக்கு அரசு வேலை வாங்கி தந்துள்ளதாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.
இந்நிலையில் முருகதாசுக்கு அவருக்கு அறிமுகமான மாரியம்மாள், சக்திவேல் ஆகியோரின் மகள் பாண்டி செல்விக்கு அரசு வேலை வாங்கி தருவதற்காக மதுரையில் உள்ள ஒரு விடுதியில் வைத்து முருகதாஸ், அசோக்குமாரை சந்தித்து பேசினார். அசோக்குமார் பல நபர்களுக்கு அரசு வேலை வாங்கி தந்துள்ளதாக தெரிவித்ததின் பேரில் முருகதாஸ், பாண்டிச்செல்விக்கு அரசு வேலை வாங்கி தருமாறு கூறினார். இதனைத் தொடர்ந்து முருகதாஸ் சென்னை கோயம்பேட்டில் ஒரு விடுதியில் வைத்து அசோக்குமாரிடம் கடந்த பிப்ரவரி மாதம் பாண்டிச்செல்விக்காக ரூ. 6½ லட்சம் கொடுத்ததாகவும், இதேபோல 21 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.1 கோடியே 5 லட்சத்து 90 ஆயிரம் வசூலிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
போலி ஆணை
இந்த பணம் அனைத்தும் அசோக்குமார், மைதிலியின் வங்கி கணக்கிலும், அவரது வீட்டில் வைத்தும் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பணத்தை பெற்றுக் கொண்ட அசோக்குமார் இதில் 16 பேருக்கு அரசு வேலைக்கான போலி பணி ஆணையை வழங்கியதாக தெரியவருகிறது.
இதையறிந்து வேலைக்காக பணம் கொடுத்த அனைவரும் வேலை வாங்கி தராத நிலையில் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டபோது அசோக்குமார் பணத்தை திருப்பித் தர மறுத்ததோடு கொலை மிரட்டல் விடுத்தாராம்..
இதுபற்றி முருகதாஸ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் அசோக்குமார், அவரது மனைவி மைதிலி, சிவகாசியை சேர்ந்த மாரிமுத்து, முருகன் ஆகிய 4 பேர் மீதும் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.