மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில்ரூ.10¼ லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு


மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில்ரூ.10¼ லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 8 July 2023 12:30 AM IST (Updated: 8 July 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.10 லட்சத்து 24 ஆயிரத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சரயு நேரில் ஆய்வு செய்தார்.

தையல் கூடம்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதனை கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி காரப்பட்டு ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க (மகளிர் திட்டம்) வட்டார இயக்க மேலாண்மை அலகின் கீழ் செயல்படும் சிறு தொழில் தையல் கூடத்தை அவர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

இந்த தையல் கூடத்தை 30 சுயஉதவி குழு உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து அவர்களது சொந்த பங்களிப்பு ரூ.41 ஆயிரம் மற்றும் திட்ட நிதி ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 8 தையல் எந்திரங்கள் வாங்கி தொழில் தொடங்கி உள்ளனர். இதையடுத்து மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் சாலை பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 68 ஆயிரத்தில் சிவம்பட்டியில் இருந்து எகிலேரியான் கொட்டாய் வரை சாலையின் இருபுறமும் தடுப்புசுவர் அமைக்கப்பட்டு வரும் பணி, சிவம்பட்டி ஊராட்சியில் கணிச்சி கிராமத்தில் ரூ.4 லட்சத்து 68 ஆயிரத்தில் சாலையின் இருபுறமும் தடுப்புசுவர் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

தடுப்புசுவர்

மேலும் வாணிப்பட்டி ஊராட்சியில் ஆனந்தூர் பாரதமேடு முதல் அம்மன் கோவில் வரை ரூ.88 ஆயிரத்தில் சாலையின் இருபுறமும் தடுப்புசுவர் அமைக்கப்பட்டு வரும் பணிகள் என மொத்தம் ரூ.10 லட்சத்து 24 ஆயிரத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மகளிர் திட்ட அலுவலர் ஜாகீர் உசேன், உதவி திட்ட அலுவலர்கள் பெருமாள், ஜெயக்கொடி, ரினால்டி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்குமரன், துரைசாமி, ஒன்றிய பொறியாளர்கள் பூம்பாவை, ஜமுனா, காரப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ரமாதேவி, மகளிர் திட்ட பணியாளர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் சுயஉதவி குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.


Next Story