நாமக்கல் மாவட்டத்தில் புகையிலை பொருட்களை விற்பனை செய்வோரின் வங்கி கணக்குகள் முடக்கப்படும் கலெக்டர் ஸ்ரேயா சிங் எச்சரிக்கை
நாமக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வோரின் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வோரின் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
வங்கி கணக்கு முடக்கம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான புகையிலை கட்டுப்பாட்டு குழுக்கூட்டம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வோர், பதுக்கி வைத்திருப்போர் ஆகியோரை கண்டறிதல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து கலெக்டர் ஸ்ரேயா சிங் பேசியதாவது:-
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் அவர்களது வங்கி கணக்குகளும் முடக்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் வாழ்வில் சரியான பாதையில் முன்னேற விண்ணைத்தொடு திட்டம் செயல்படுத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு ஒழுக்கத்தின் உயர்வு குறித்தும், கல்வியில் முன்னேறுவது குறித்தும் மருத்துவர்கள், ஆசிரியர்கள், நெறியாளர்கள் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
தடை செய்யப்பட்ட பொருட்களை வணிகர்கள் இருப்பு வைத்திருப்பதோ, விற்பனை செய்வதோ குற்றம் என்பது குறித்தும், மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் வணிகர் சங்க நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு யாரேனும் விற்பனை செய்தால் அது குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம். தவறு செய்வோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வு கூட்டம்
இதை தொடர்ந்து மருத்துவ அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளான கர்ப்பிணிகளின் விவரங்களை பதிவு செய்தல், கர்ப்பிணிகளுக்கான மாதாந்திர பரிசோதனை, மகப்பேறு சிகிச்சை அளித்தல், பிரசவ சிகிச்சை உள்ளிட்ட சுகாதார பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் காசநோய், தொழுநோய், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் சிகிச்சை, பயனாளிகளின் எண்ணிக்கை குறித்தும், சிகிச்சை அளிக்கப்பட்ட நபர்களின் சுகாதார முன்னேற்றம் குறித்தும் விரிவாக ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில் அதிக மகப்பேறு சிகிச்சைகளை மேற்கொண்ட வட்டார மருத்துவ அலுவலர்கள், ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்களுக்கு கேடயங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சேகர், அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரபாகரன், துணை இயக்குனர் (குடும்ப நலம்) வளர்மதி, துணை இயக்குனர் (காசநோய்) வாசுதேவன், துணை இயக்குனர் மருத்துவப்பணிகள் (தொழுநோய்) ஜெயந்தினி உள்பட சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.