பாப்பிரெட்டிப்பட்டி அருகே பயனாளிகளுக்கு ரூ.1.71 கோடியில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சாந்தி வழங்கினார்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பயனாளிகளுக்கு ரூ.1.71 கோடியில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சாந்தி வழங்கினார்
அரூர்:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே வாச்சாத்தி கிராமத்தில் பயனாளிகளுக்கு ரூ.1.71 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
மக்கள் தொடர்பு திட்ட முகாம்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பே.தாதம்பட்டி ஊராட்சி வாச்சாத்தி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். சம்பத்குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அரூர் உதவி கலெக்டர் ராஜசேகரன் வரவேற்று பேசினார்.
முகாமில் கலெக்டர் சாந்தி பேசுகையில், தமிழக அரசின் திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக பெற்று பயன்படுத்தி கொண்டு தங்களின் வாழ்க்கை தரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தி கொள்ள வேண்டும். இந்த முகாமில் பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். வாச்சாத்தி கிராமத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது என்று பேசினார்.
நலத்திட்ட உதவிகள்
இந்த முகாமில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 227 பயனாளிகளுக்கு ரூ.66.03 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 113 பயனாளிகளுக்கு ரூ.89.67 லட்சத்தில் பல்வேறு உதவி தொகைகள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 7 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1.75 லட்சம் மதிப்பீட்டில் சுய உதவிக்குழு கடன் உதவிகள் என மொத்தம் 411 பயனாளிகளுக்கு ரூ.1.71 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். முன்னதாக பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இதில் தர்மபுரி உதவி கலெக்டர் ஜெயக்குமார், அரூர் உதவி வன பாதுகாவலர் சரவணன், வேளாண்மை இணை இயக்குனர் விஜயா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் மாலினி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பொன்மலர் பசுபதி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சங்கீதா, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் ஜெயந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.