இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரித்து வருகிறது-தர்மபுரி கலெக்டர் சாந்தி தகவல்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரித்து வருகிறது என்று கலெக்டர் சாந்தி கூறினார்.
இல்லம் தேடி கல்வி திட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் 4 ஆயிரத்து 314 தொடக்க நிலை மையங்கள் மற்றும் 2 ஆயிரத்து 922 உயர் தொடக்க நிலை மையங்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 236 குடியிருப்பு பகுதிகளில் மாணவ, மாணவிகளுக்கு தன்னார்வலர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஏர்ரஅள்ளியில் உள்ள அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலக வளாகம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தேவரசம்பட்டி சமுதாய கூடம் ஆகியவற்றில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்கள் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாடங்கள் கற்பிக்கும் பணியை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இங்கு பாடங்கள் நன்றாக நடத்தப்படுகிறதா? என்று மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தார். அதற்கு, பாடங்கள் புரியும் வகையில் நடத்தப்படுவதாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.
கற்றல் திறன் அதிகரிப்பு
இதுகுறித்து கலெக்டர் சாந்தி கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 745 மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக பாடங்கள் தன்னார்வலர்கள் மூலம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளில் ஈடுபட்டு வரும் 7 ஆயிரத்து 236 தன்னார்வலர்களுக்கு மாதம் தலா ரூ.1,000 வீதம் இந்த மாதம் வரை ரூ.6 கோடியே 6 லட்சம் உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினால் பள்ளி மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் சிறப்பாக அதிகரித்து வருகிறது என்று கூறினார்.
ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் ராஜகோபால் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.