தர்மபுரியில்அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம்கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது
தர்மபுரியில் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது.
ஆலோசனை கூட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் உள்ள முதன்மை கல்வி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டு அந்தந்த பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் கல்வியின் முன்னேற்றம் குறித்து விளக்கி கூறினர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சிறந்த முறையில் கல்வி கற்பிக்க சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு அரசின் நலத்திட்டங்களின் விவரங்களை அறிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைகள் முழுமையாக சென்றடைவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
கழிப்பறைகள்
அரசு பள்ளி வளாகம் மற்றும் கழிப்பறைகள் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். பள்ளிக்கூட கட்டிடங்களின் உறுதித்தன்மை, மேற்கூரை பராமரிப்பு, சுற்றுச்சுவர், மின்கசிவு இன்மை ஆகியவற்றில் தலைமை ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும். தர்மபுரி மாவட்ட அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய வருவாய் திறனறி தேர்வு, ஊரக திறனாய்வு தேர்வு, தமிழ் இலக்கிய திறனறி தேர்வுகளை எழுதுவதற்கு தயார்படுத்த வேண்டும். அவர்களுக்கு தேவையான சிறந்த பயிற்சியை அளிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இதில் இடைநிலை கல்வி மாவட்ட கல்வி அலுவலர் ராஜகோபால், தர்மபுரி தொடக்கக்கல்வி மாவட்ட கல்வி அலுவலர் மான்விழி, அரூர் தொடக்க கல்வி மாவட்ட கல்வி அலுவலர் ஷகில் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.