தர்மபுரியில் நாளை ஜல்லிக்கட்டு: முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆலோசனை
தர்மபுரி:
தர்மபுரியில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை முன்னிட்டு கலெக்டர் சாந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஜல்லிக்கட்டு போட்டி
தர்மபுரி சோகத்தூர் டி.என்.சி. மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் 500 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்குபெறும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் போட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் மற்றும் துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி, பேசியதாவது:-
தர்மபுரியில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்த வேண்டும். போட்டியில் காளையின் உரிமையாளர் மற்றும் உதவியாளருக்கு ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும்.
கண்காணிப்பு
அடையாள அட்டை இல்லாத நபர்களுக்கு போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை. காளைகளை பதிவு செய்யும்போது உரிமையாளர் மற்றும் உதவியாளரும் தங்களது பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்தல் வேண்டும். போட்டியில் அரசின் விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளதா? என்பதை அந்தந்த துறை அலுவலர்கள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் சாந்தி பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜோசுபாதம், உதவி கலெக்டர் கீதாராணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாந்தி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவல்லி, கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சாமிநாதன், வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், தாசில்தார் ஜெயசெல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரி மற்றும் விழாக்குழுவினர், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.