பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்துபொதுமக்கள் மஞ்சப்பைகளை பயன்படுத்த வேண்டும்கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்


பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்துபொதுமக்கள் மஞ்சப்பைகளை பயன்படுத்த வேண்டும்கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 2 May 2023 12:30 AM IST (Updated: 2 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

பர்கூர்:

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து பொதுமக்கள் மஞ்சப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்று கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவுரை வழங்கினார்.

கிராமசபை கூட்டம்

பர்கூர் ஒன்றியம் பாலிநாயனப்பள்ளி ஊராட்சி செட்டிப்பள்ளியில் தொழிலாளர்கள் தினத்தையொட்டி ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் துறை சார்பில் கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். மதியழகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

தொழிலாளர்கள் தினத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், கிராம ஊராட்சி தணிக்கை, கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

தூய்மை பாரத இயக்கம்

அதேபோல கிராம வளர்ச்சி திட்டம் 2023-2024 தயாரித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்க திட்ட செயல்பாடுகள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நான் முதல்வன் திட்டம், குழந்தை திருமண தடுப்பு உறுதிமொழி குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 2023-2024 நிதியாண்டில் செயல்படுத்தபட வேண்டிய திட்டப்பணிகள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் இல்லாத ஊராட்சி

வருகிற 15-ந் தேதி வரை நமது கிராமங்களை நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் மாலை 6 மணிக்கு தூய்மைப்படுத்திட வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து மஞ்சப்பைகளை பயன்படுத்த வேண்டும். பாலிநாயனப்பள்ளி ஊராட்சியை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத ஊராட்சியாக மாற்ற பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தமிழக அரசு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பெண் உயர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் மாதாந்திர உதவித்தொகை வழங்கி வருகிறது. கிராமங்களில் அனைத்து குழந்தைகளும் பள்ளி இடை நிற்றலை தவிர்த்து அனைவரும் பள்ளிக்கு செல்வதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் மகாதேவன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உறுதிமொழி

தொடர்ந்து கலெக்டர் தலைமையில் எங்கள் கிராமம் எழில்மிகு கிராமம் என்ற உறுதி மொழியை பொதுமக்கள், அரசுத்துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற நம்ம ஊரு சூப்பரு, நாம் ஒன்றிணைவோம், பசுமையும் தூய்மையும் நமதாக்குவோம் என்ற விழிப்புணர்வு ஊர்வலத்தில் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், அரசுத்துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story