இருதுக்கோட்டையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்:192 பயனாளிகளுக்கு ரூ.59 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்


இருதுக்கோட்டையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்:192 பயனாளிகளுக்கு ரூ.59 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்
x
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே இருதுக்கோட்டையில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 192 பயனாளிகளுக்கு சுமார் ரூ.58.91 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே இருதுக்கோட்டை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். செல்லகுமார் எம்.பி., தளி ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் இருதுக்கோட்டை ஊராட்சி பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. பின்னர் அதில் 192 மனுக்கள் தொடர்பாக ரூ.58 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மீதமுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் தொண்டு நிறுவனம் சார்பில் 250 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் கலெக்டர் வழங்கினார்.

தூய்மை பணி

முகாமில் கலெக்டர் பேசுகையில், தமிழ்நாடு அரசு அறிவித்த நம்ம ஊரு சூப்பரு தூய்மை பணி இயக்கத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொது இடங்களில் குப்பைகளை தவிர்ப்பதன் மூலம் சுற்றுப்புறத்தினை பசுமையாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் மஞ்சப்பை மற்றும் துணி பைகளை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் ஒன்றியக்குழு தலைவர் கேசவமூர்த்தி, மாவட்ட சமூகநல அலுவலர் விஜயலட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பத்மலதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் சிவகாந்தி, தாசில்தார் சரவண மூர்த்தி, தனி தாசில்தார் மோகன்தாஸ், மண்டல துணை தாசில்தார் மதன்ராஜ், தலைமை எழுத்து துணை தாசில்தார் பாலகிருஷ்ணன் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story