டிரான்ஸ்பார்மர் பழுதால் 2 மாதங்களாக மின்சாரம் இன்றி தவிப்பு கொல்லிமலை மலைவாழ்மக்கள், கலெக்டரிடம் மனு


டிரான்ஸ்பார்மர் பழுதால் 2 மாதங்களாக மின்சாரம் இன்றி தவிப்பு கொல்லிமலை மலைவாழ்மக்கள், கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 4 July 2023 12:30 AM IST (Updated: 4 July 2023 11:21 AM IST)
t-max-icont-min-icon

டிரான்ஸ்பார்மர் பழுதால் 2 மாதங்களாக மின்சாரம் இன்றி தவிப்பு கொல்லிமலை மலைவாழ்மக்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நாமக்கல்

கொல்லிமலையில் டிரான்ஸ்பார்மர் பழுதடைந்ததால் 2 மாதங்களாக மின்சாரம் இன்றி தவித்து வருவதாக மலைவாழ் மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கலெக்டரிடம் மனு

கொல்லிமலை சேளூர்நாடு ஊராட்சிக்குட்பட்ட அடுக்கம் நெடுங்காபுளிபட்டி பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் உமாவிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2 மாதமாக சேளூர்நாடு பகுதியில் மின்சார வினியோகம் இல்லை. இதனால் சேளூர்நாடு ஊராட்சிக்குட்பட்ட மக்கள் தினசரி மின்சாரம் இல்லாமல் சிரமப்பட்டு கொண்டிருக்கிறோம். இதுகுறித்து அங்குள்ள மின்வாரிய அலுவலரிடம் தகவல் சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை மாற்றி சீராக மின்சாரம் வழங்க வேண்டும். குடியிருப்புகள் மற்றும் இதர பயன்பாட்டிற்கு மின் இணைப்பு இல்லாமல் இரவு நேரங்களில் இருளில் மூழ்கி அவதியடைந்து வருகிறோம். எனவே உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும்.

மாணவர்களுக்கு ஆபத்து

மேலும் கொல்லிமலை நெடுங்காபுளிபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தின் வழியாக செல்லக்கூடிய மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் ஆபத்து ஏற்படுத்தும் அளவில் இருக்கிறது. அதை பள்ளி சுற்றுசுவருக்கு வெளியில் மாற்றி அமைத்து தர வேண்டும். மேலும் மின்கம்பம் பழுதடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளதால் மாணவ, மாணவிகளுக்கு ஆபத்து ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

மேலும் இப்பகுதிகளுக்கு குடிநீர் வினியோகமும் சீராக இல்லாமல் மக்கள் குடிநீருக்கு அல்லல்படும் நிலைமை நீடிப்பதாக கூறினர்.

இதற்கிடையே கலெக்டர் உமா உத்தரவின்பேரில் மின்வாரிய ஊழியர்கள் நெடுங்காபுளிபட்டி பகுதிக்கு சென்று பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை சரி செய்து மின்சாரம் வினியோகம் சீரடைந்தது. உடனடி நடவடிக்கை எடுத்த கலெக்டருக்கு மலைவாழ் மக்கள் நன்றியை தெரிவித்து கொண்டனர்.


Next Story