கிரிவலப்பாதையில் ஆக்கிரமிக்கப்பட்ட கூடாரங்கள், கடைகள் அகற்றம் சாதுக்களுக்கு அடையாள அட்டை வழங்க கலெக்டர் நடவடிக்கை


திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த தற்காலிக கூடாரங்கள், கடைகள் அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. மேலும் சாதுக்களுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த தற்காலிக கூடாரங்கள், கடைகள் அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. மேலும் சாதுக்களுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.

சாதுக்கள் அதிகரிப்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள கிரிவலப்பாதையில் நாளுக்கு நாள் சாதுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. கிரிவலப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகளிலும், நிழற்குடைகளிலும் சாதுக்கள் ஆக்கிரமித்து கொண்டு கூடராங்கள் அமைத்து வசித்து வருகின்றனர்.

மேலும் சிலர் நடைபாதையில் அமைக்கப்பட்டு உள்ள இருக்கைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைத்து உள்ளனர். இதனால் பக்தர்கள் நடைபாதையில் நடக்க முடியால் சாலையில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டு வந்தது.

இது குறித்து தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நேற்று முன்தினம் இரவு வரை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தாமாக முன்வந்து அகற்றிட வேண்டும் என்று கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் அதனை அகற்றவில்லை.

கலெக்டர் ஆய்வு

அதை தொடர்ந்து நேற்று அகற்றாத ஆக்கிரமிப்புகளை ஒட்டுமொத்தமாக அகற்றும் பணிக்காக நெடுஞ்சாலைத்துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறை உள்ளிட்ட அரசு துறைகளை ஒருங்கிணைத்து 7 குழுக்கள் அமைக்கப்பட்டது.

இக்குழுக்களில் தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், போலீசார், பொறியியல் பிரிவு அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், நில அளவையர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்பட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர். இந்த 7 குழுக்களும் இணைந்து அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றி அமைந்துள்ள ஆக்கிரமிப்புகள், கிரிவலப்பாதையில் பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கிரிவலப்பாதையில் உள்ள சாதுக்கள் அமைத்திருந்த கூடாரங்களை நேரில் பார்வையிட்டு அவற்றை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.

யாத்திரி நிவாஸ்

மேலும் கிரிவலப்பாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட பெட்டி கடைகளும் அகற்றப்பட்டன. அத்துடன் சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள கடை உரிமையாளர்களை நேரில் சந்தித்து கடையின் முகப்பில் மேற்கூரைகள் கூடுதலாக அமைக்ககூடாது, குப்பை தொட்டியில் குப்பைகளை கொட்ட வேண்டும் , மின்விளக்கு கம்பங்கள் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள மரங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்றிட வேண்டும் எனவும் கலெக்டர் அறிவுறுத்தினார். ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியின் போதே கிரிவலப்பாதையில் உள்ள குப்பைகள் அகற்றும் பணியும் நடைபெற்றது.

இது குறித்து கலெக்டர் முருகேஷ் கூறுகையில், ''கிரிவலப்பாதையில் சாதுக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. சாதுக்கள் மற்றும் சிலர் கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்பு செய்து தார் பாய் மூலம் கூடாரங்கள் மற்றும் கடைகள் அமைத்து உள்ளனர். அவை அகற்றப்பட்டு உள்ளது. நடைபாதையில் கூடாரங்கள் அமைத்து தங்கிய இருந்த சாதுக்களை நெடுஞ்சாலைத்துறை மூலம் கிரிவலப்பாதையில் 3 இடங்களில் கட்டப்பட்டு உள்ள யாத்திரி நிவாஸ் கட்டிடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அடையாள அட்டை

மேலும் மாதத்திற்கு ஒரு முறை கிரிவலப்பாதையில் சம்மந்தப்பட்ட துறைகளின் மூலம் இது போன்று ஆக்கிரமைப்புகள் உள்ளனவா என கண்காணிக்கப்பட்டு அகற்றும் பணி நடைபெறும். தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் சாதுக்களுக்கு கியூஆர் கோடுடன் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



Next Story