கடலூரில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சில்வர் பீச்சை மேம்படுத்த திட்டம் கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு


கடலூரில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சில்வர் பீச்சை மேம்படுத்த திட்டம் கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு
x
தினத்தந்தி 12 Aug 2023 12:15 AM IST (Updated: 12 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் சில்வர் பீச்சை மேம்படுத்துவது குறித்து கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

கடலூர்

கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சால்ட் ஆபீஸ் ரோடு மற்றும் இருசப்பன் தெரு பகுதியில் மாநில பேரிடர் மீட்பு நிதியின் கீழ் ரூ.1.99 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை நேற்று காலை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர், நத்தவெளி, வண்டிப்பாளையம், அண்ணாமலைநகர் பகுதியில் மாநில பேரிடர் மீட்பு நிதியின் கீழ் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியையும், திருப்பாதிரிப்புலியூரில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ரூ.1.10 கோடி மதிப்பில் நகர்புற வீடட்றோர் புகலிடம் மையம் கட்டும் பணியையும், கடற்கரை சாலையில் நவீன நூலக கட்டிடம் கட்டும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

பின்னர் அவர், மாநகராட்சி பகுதியில் நடைபெறும் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளையும் குறிப்பிட்ட கால கெடுவிற்குள் விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து சில்வர் பீச் பகுதியை பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் மேம்படுத்துவது குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.

இதையடுத்து வேணுகோபாலபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்த கலெக்டர், மாணவிகளுடன் கலந்துரையாடி, கல்வியின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். அப்போது மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், பொறியாளர் குருசாமி, உதவி பொறியாளர் பாரதி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.


Next Story