நாகர்கோவிலில் கலெக்டர் அரவிந்த் தேசியக்கொடி ஏற்றினார்


75-வது சுதந்திர தினத்தையொட்டி, நாகர்கோவிலில் கலெக்டர் அரவிந்த் தேசியக்கொடி ஏற்றினார். இந்த விழாவில் ரூ.5.17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

75-வது சுதந்திர தினத்தையொட்டி, நாகர்கோவிலில் கலெக்டர் அரவிந்த் தேசியக்கொடி ஏற்றினார். இந்த விழாவில் ரூ.5.17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

கலெக்டர் தேசியக்கொடி ஏற்றினார்

இந்தியா முழுவதும் 75-வது சுதந்திர தினவிழா நேற்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் 75-வது சுதந்திர தினவிழா நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று காலை நடந்தது. இதற்காக காலை 9 மணிக்கு அண்ணா விளையாட்டு அரங்கத்துக்கு வருகை தந்த கலெக்டர் அரவிந்தை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வரவேற்றார்.

பின்னர் 9.05 மணிக்கு விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் தேசியக்கொடியை கலெக்டர் அரவிந்த் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் பங்கேற்ற அனைவரும் எழுந்து நின்று தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தினர். அதைத்தொடர்ந்து அவர் அலங்கரிக்கப்பட்ட திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உடன் சென்றார். அதைத்தொடர்ந்து தேசியக் கொடியின் மூவர்ண பலூன்களையும், வெண் புறாக்களையும் பறக்க விட்டார்.

நலத்திட்ட உதவிகள்

பின்னர் ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா தலைமையில் நடந்த ஆயுதப்படை போலீசார், ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படையினர், ஸ்கவுட் மற்றும் ஸ்கைட்ஸ் மாணவ- மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து 14 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 17 ஆயிரத்து 261 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வருவாய்த்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டன.

205 பேருக்கு நற்சான்று

நெதர்லாந்தில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு நடந்த உலக அளவிலான தடகளப்போட்டியில் 3 தங்கப்பதக்கங்களை வென்ற கிருஷ்ணரேகா உள்பட 55 போலீசார் மற்றும் ஊர்க்காவல்படையினருக்கும், தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறையின் குமரி மாவட்ட நியமன அதிகாரி டாக்டர் செந்தில்குமார், நாகர்கோவில் மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி குமாரபாண்டியன், கணபதிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் மதன்குமார் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், பணியாளர்கள் 205 பேர் சிறப்பாக பணியாற்றியதற்கான நற்சான்றிதழ்களை கலெக்டர் அரவிந்த் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் 4 கல்வி மாவட்டங்களின் 8 பள்ளிகளை சேர்ந்த 280 மாணவ- மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலைநிகழ்ச்சி முடிவில் பங்கேற்ற அனைத்து பள்ளிகளுக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

எம்.பி.- மேயர்

விழாவில் விஜய் வசந்த் எம்.பி., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் உதவி கலெக்டர் அலர்மேல்மங்கை, மாவட்ட வனத்துறை அதிகாரி இளையராஜா, நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், துணை சூப்பிரண்டுகள் நவீன்குமார், ராஜா, வேதமாணிக்கம், நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் திருவாசகமணி, சூப்பிரண்டு அருள்பிரகாஷ், உதவி உறைவிட மருத்துவ அதிகாரிகள் விஜயலெட்சுமி, ரெனிமோள், தாசில்தார்கள் சேகர், கண்ணன், கோலப்பன், சுப்பிரமணி மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சுதந்திர தினவிழாவையொட்டி விளையாட்டரங்க வளாகத்தில் ஆங்காங்கே தேசியக்கொடியின் மூவர்ண நிறத்திலான பலூன்கள் கட்டப்பட்டு இருந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்க தீயணைப்பு படையினரும் விழா நடந்த விளையாட்டரங்க பகுதியில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர்.

குடும்பத்தினரோடு பங்கேற்ற அதிகாரிகள்

நாகர்கோவிலில் நடந்த சுதந்திர தினவிழாவில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், அவருடைய மனைவி கிருத்திகா, மகன் ஏ.கே.சிவேஸ், மகள் ஏ.கே.மகிமா ஆகியோருடன் பங்கேற்றார். அதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மனைவி விஷாலா, மகன் மிஸ்விக் ஆகியோருடனும், மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் மனைவி டாக்டர் ராதிகாவுடனும், மாவட்ட வனத்துறை அதிகாரி இளையராஜா மனைவி டாக்டர் ராகிணியுடனும் கலந்து கொண்டனர். மேற்கண்ட அதிகாரிகளின் குடும்பத்தினரும் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளையும், பள்ளி மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளையும் விழா மேடையில் அமர்ந்து கண்டுகளித்தனர்

ஆங்கிலேயரிடம் பட்ட கொடுமைகளை தத்ரூபமாக நடித்துக்காட்டிய மாணவர்கள்

கொரோனா தொற்று பரவலின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடந்த சுதந்திர தினவிழா மற்றும் குடியரசு தினவிழாவில் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெறவில்லை.

இந்தநிலையில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில் பள்ளி மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதில் தக்கலை அமலா கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவில் டதி மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஆற்றூர் என்.வி.கே.எஸ். மேல்நிலைப்பள்ளி, குறத்தியறை அரசு மேல நிலைப்பள்ளி, மார்த்தாண்டம் கிறிஸ்துராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவில் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி, திருவட்டார் அருணாச்சலா மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் தேசபக்தி பாடல்களுக்கும், தேச ஒற்றுமையை வலியுறுத்தும் பாடல்களுக்கும் வித, விதமான உடை, அலங்காரங்களில் நடனம் ஆடி பார்வையாளர்கள் அனைவரையும் அசத்தினர்.

ஆங்கிலேயர்களின் ஆட்சியின்போது தேச விடுதலைக்காக போராடியவர்களை ஆங்கிலேய அரசின் அதிகாரிகளும், போலீசாரும் அடித்து, உதைத்து கொடுமைப்படுத்திய சம்பவங்களை நம் கண்முன்னே கொண்டுவரும் விதமாக சூரங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தத்ரூபமாக நடித்துக் காட்டியது பார்வையாளர்கள் அனைவரின் மனதையும் பதைபதைக்க வைப்பதாக இருந்தது.

சிறப்பாக செயல்பட்ட 4 பேரூராட்சிகளுக்கு கேடயம் பரிசு

நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் நடந்த சுதந்திர தினவிழாவில் நலத்திட்ட உதவிகளும், சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்கள், போலீசாருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. அதேபோல் பேரூராட்சிகளின் சிறப்பு செயல்பாடுகளுக்காக கேடயம் பரிசு வழங்கப்பட்டது.

கழிவுநீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்டதற்காக திங்கள்நகர் பேரூராட்சிக்கும், மக்கள் இயக்க சிறப்பு செயல்பாட்டுக்காக கிள்ளியூர் பேரூராட்சிக்கும், பிளாஸ்டிக் தடைசெய்வதில் சிறப்பாக செயல்பட்ட ஆற்றூர் பேரூராட்சிக்கும், திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்ட கப்பியறை பேரூராட்சிக்கும் என 4 பேரூராட்சிகளுக்கும் கலெக்டர் அரவிந்த் கேடயத்தை பரிசாக வழங்கினார். அதனை அந்தந்த பேரூராட்சி அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர்.


Next Story