திட்டங்களை சரியாக செயல்படுத்தினால் கிராமம் வளர்ச்சி அடையும் கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் பேச்சு
திட்டங்களை சரியாக செயல்படுத்தினால் கிராமம் வளர்ச்சி அடையும் என மருதாடு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் பேசினார்.
நெல்லிக்குப்பம்,
குடியரசு தினத்தை முன்னிட்டு கடலூர் அடுத்த மருதாடு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர், மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன் வரவேற்றார்.
கூட்டத்தில் பொதுமக்கள் பேசுகையில், எங்கள் ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யாமல் உள்ளது. பொது கழிப்பறை இல்லாததால் பெண்கள் உள்ளிட்ட பெரும்பாலான மக்கள் பொது இடங்களில் இயற்கை உபாதையை கழிக்க வேண்டிய அவல நிலையில் உள்ளோம் என்றனர்.
சுகாதாரமாக வாழ வேண்டும்
தொடர்ந்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் பேசியதாவது:- ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை உரிய முறையில் தரம் பிரித்து துப்புரவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும், அவர்கள் உரம் உற்பத்தி செய்து அனைவரும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக அமையும். ஒவ்வொரு கிராமத்திலும் சுகாதாரம், கொசு ஒழிப்பு பணி, நீர் நிலை பாதுகாப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினால் சரியான முறையில் கிராமம் வளர்ச்சி அடையும். தூய்மை பாரத திட்டத்தில் கழிவறை கட்ட ஒரு பயனாளிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் பெற்றுக் கொண்டு கூடுதலாக பணம் செலவு செய்து நல்ல முறையில் கழிப்பறை கட்டி திறந்தவெளியில் இயற்கை உபாதையை கழிக்காமல் சுகாதாரமாக வாழ வேண்டும். மேலும் இந்த பகுதியில் பொது கழிப்பறை கட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இதில் தாசில்தார் பூபாலச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்தி, ரவிச்சந்திரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.