விழுப்புரத்தில் புத்தக திருவிழா 25-ந் தேதி தொடக்கம்முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை
விழுப்புரத்தில் புத்தக திருவிழா வருகிற 25-ந் தேதி தொடங்குவதையொட்டி முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்கூட்டம்
விழுப்புரத்தில் நடைபெற உள்ள புத்தக திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர், பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை தூண்டும் விதமாகவும், அறிவார்ந்த சமுதாயம் உருவாக வேண்டும் என்பதற்காகவும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்த உத்தரவிட்டுள்ளார்.
25-ந் தேதி புத்தக திருவிழா
அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் புத்தக திருவிழா வருகிற 25-ந் தேதி முதல் தொடங்குகிறது. இதனை அமைச்சர்கள் க.பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். இந்த புத்தக திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதி வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது. தினந்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக திருவிழா நடைபெறும்.
இதில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை புத்தகம் வாசித்தல், புத்தகம் குறித்து விவாதித்தல், பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு அறிவுத்திறன் சார்ந்த போட்டிகளும், மதியம் 2.00 மணி முதல் இரவு 10 மணி வரை பள்ளி- கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், உள்ளூர் பேச்சாளர்கள் மற்றும் சிறப்பு பேச்சாளர்கள் கலந்துகொள்ளும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்களும் நடைபெறவுள்ளது.
புகைப்பட கண்காட்சி
மேலும் புத்தக திருவிழாவில் 100 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. இந்த அரங்கில் கலை, இலக்கியம், இலக்கணம், வரலாறு, புதினம், கவிதை, பண்பாடு, அறிவியல், ஆன்மீகம், போட்டித்தேர்விற்கான புத்தகங்கள், சரித்திர மற்றும் சமூக நாவல்கள் என அனைத்து விதமான புத்தகங்களும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாங்கிடும் வகையில் 10 ரூபாய் முதல் அனைவருக்கும் ஏற்ற வகையில் புத்தகங்கள் இடம்பெறவுள்ளன.
இதுதவிர வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை சார்பில் குறைந்த விலையில் மரக்கன்றுகள் விற்பனை செய்தல், குழந்தைகள் மகிழும் வகையில் ராட்டினம், சருக்காமரம், ஜம்பிங், ெரயில் சவாரி, சிறிய அளவிலான சினிமா அரங்கம் போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளது. மிக பிரமாண்ட முறையில் நடைபெறவுள்ள புத்தக திருவிழாவை காண விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள், மாணவர்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
அறிவுசார்ந்த தேடல் களம்
எனவே பொதுமக்கள், மாணவ- மாணவிகள், பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் தங்களது அறிவுசார்ந்த தேடலுக்கான களமாகவும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து புத்தகங்களை வாங்கிக்கொடுத்து நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுக்கும் இடமாகவும், நண்பர்களுக்கு பரிசாக புத்தகங்களையே வழங்கிடும் முறையை ஏற்படுத்திக்கொள்ளும் விதமாகவும், இந்த புத்தக திருவிழாவை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் தங்களது ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஸ்வநாதன், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.