ரேஷன் பொருட்கள் இருப்பில் முரண்பாடுஊழியருக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் நடவடிக்கை
கூத்தாநல்லூர் அருகே ரேஷன் பொருட்கள் இருப்பில் முரண்பாடு கண்டறியப்பட்டதை தொடர்ந்து ஊழியருக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொண்டார்.
கூத்தாநல்லூர் அருகே ரேஷன் பொருட்கள் இருப்பில் முரண்பாடு கண்டறியப்பட்டதை தொடர்ந்து ஊழியருக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொண்டார்.
ரேஷன் கடையில் ஆய்வு
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே லெட்சுமாங்குடியில் உள்ள ராமநாதன் கோவில் ரேசன் கடையில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது ரேஷன் பொருட்கள் முறைப்படி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறதா? தட்டுப்பாடு உள்ளதா? அரிசி, கோதுமை, பருப்பு, மண்எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் இருப்பு எவ்வளவு? என்பது குறித்து கடை ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.
ரேசன் பொருட்கள் மக்களுக்கு தங்கு தடையில்லாமல் உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்றும் ஊழியர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். அப்போது மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா, வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஷ், தாசில்தார் சோமசுந்தரம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
அபராதம் விதிப்பு
ஆய்வை தொடர்ந்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'லெட்சுமாங்குடி ராமநாதன்கோவில் ரேஷன் கடையில் ரேஷன் பொருட்கள் இருப்பு சரிபார்க்கப்பட்டது. அப்போது புழுங்கல் அரிசி 1,400 கிலோ அதிகமாக இருந்தது. சர்க்கரை 4 கிலோ, 1 லிட்டர் பாமாயில் இருப்பு குறைவாக இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது.
ரேஷன் பொருள் இருப்பில் முரண்பாடு கண்டறியப்பட்டதை தொடர்ந்து ரேஷன் கடை விற்பனையாளருக்கு ரூ.35,275 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரேசன் கடை விற்பனையாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என கூறப்பட்டுள்ளது.