தமிழக அரசின் அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசின் அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கூறினார்.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த மகளிருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக மகளிர் தின விழாவில் அவ்வையார் விருது வழங்க உள்ளார். இவ்விருதிற்கு ரொக்கப்பரிசு, தங்கப்பதக்கம், பாராட்டு சான்றிதழ் மற்றும் சால்வை வழங்கப்படும். பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணி புரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
இந்த விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
தகுதிகளையுடைய சமூக சேவை புரிந்த மகளிர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் வருகிற 18-ந் தேதிக்குள் தமிழக அரசின் விருதுகள் என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து உரிய ஆவணங்களை கையேடாக (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலா 3 நகல்கள்) தயார் செய்து மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.