100 நாள் வேலை திட்டத்தில் ஆன்லைன் வருகை பதிவேடு
100 நாள் வேலை திட்டத்தில் ஆன்லைன் வருகை பதிவேடு அமல்படுத்தப்படுவதாக கலெக்டர் அனீஷ் சேகர் கூறியுள்ளார்.
100 நாள் வேலை திட்டத்தில் ஆன்லைன் வருகை பதிவேடு அமல்படுத்தப்படுவதாக கலெக்டர் அனீஷ் சேகர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகை பதிவேடு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (100 நாள் வேலை) கீழ் நடைபெறும் பணிகள் மற்றும் பணியாளர்களின் வருகை இதுவரை பதிவேடுகளில் பதிவு செய்து ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தின் பணிகள் மற்றும் பணிபுரியும் பணியாளர்களின் வருகை விவரங்கள் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும், அரசு விதிமுறைகளின்படி உரிய நேரம் வரை பணிபுரிவதை உறுதி செய்யும் வகையில் என்.ஆர்.இ.ஜி.ஏ. இணையதளத்தில் பதிவாகும் வகையில் தேசிய கண்காணிப்பு அமைப்பின் செயலி வாயிலாக 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள பணிகளில் பணிபுரியும் பணியாளர்களின் வருகையினை பதிவு செய்தல் கடந்த மே மாதம் 16-ந் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தற்போது 20-க்கும் குறைவான பணியாளர்கள் உள்ள பணிகளையும் இணையதளத்தில் பதிவாகும் வகையில் தேசிய கண்காணிப்பு அமைப்பின் செயலி வாயிலாக வருகையினை பதிவு செய்யும் பணி 1-ந் தேதி (நாளை) முதல் செயல்படுத்த அரசு அறிவுறுத்தி உள்ளது.
பணியாளர்கள்
எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பணிபுரியும் மாற்று திறனாளிகள் உள்பட அனைத்து பணியாளர்களும் காலை மற்றும் பகலில் தங்களின் வருகையினை தவறாமல் செயலி வாயிலாக பதிவு செய்தால் மட்டுமே தாங்கள் பணிக்கு வருகை தந்தது உறுதி செய்யப்பட்டு ஊதியம் வழங்க இயலும். எனவே ஊராட்சி மன்ற தலைவர்கள், பணித்துணையாளர் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் இதனை அறிந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.