நெல்கொள்முதல் மையங்கள் விரைவில் திறக்கப்படும்


நெல்கொள்முதல் மையங்கள் விரைவில் திறக்கப்படும்
x

நெல்கொள்முதல் மையங்கள் விரைவில் திறக்கப்படும் என்று கலெக்டர் அனீஷ் சேகர் கூறியுள்ளார்.

மதுரை

நெல்கொள்முதல் மையங்கள் விரைவில் திறக்கப்படும் என்று கலெக்டர் அனீஷ் சேகர் கூறியுள்ளார்.

மவுன அஞ்சலி

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் அனீஷ்சேகர் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் விவேகானந்தன், மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் குருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை பொதுப்பணித்துறை, மின்வாரியம், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியவுடன் கலெக்டருக்கு விவசாயிகள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து பொன்னாடை போர்த்தினர். அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவு மற்றும் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நினைவு தினம் கருதி விவசாயிகள் சார்பில் இந்த கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனைத்தொடர்ந்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன்பின் விவசாயிகள் பேசியதாவது:- மாவட்டத்தில் ஒரு போக பாசன பகுதியில் நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது. அரசு முறையாக நெல் கொள்முதல் மையத்தை நிறுவ வேண்டும். எங்கு மையம் திறக்கப்பட்டுள்ளது என்பதை முன்கூட்டியே மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு அறிவிக்க வேண்டும். கோவிலாங்குளம் பெத்தன் கண்மாய் வழியாக வரும் வரத்துக்கால்வாய் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நிலமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் 7 ஊர்களின் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லவில்லை. வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். மதுரை மாவட்டத்தில் நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் விளையும் நிலத்தில் காட்டுப் பன்றிகள் புகுந்து நாசம் செய்கின்றது. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. கண்மாய்களில் மீன் குஞ்சு வளர்ப்பதற்கு அனுமதி தரக்கூடாது.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

சிறுதானிய ஆண்டு

தொடர்ந்து கலெக்டர் அனீஷ் சேகர் பேசும்போது, நெல் கொள்முதல் மையம் விரைவில் தொடங்கப்படும். அதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. எந்த ஊர்களில் எல்லாம் மையம் அமைக்கப்படுகிறது என்ற விபரம் முறையாக விவசாயிகளுக்கு தெரியப்படுத்தப்படும் என்றார். அதன்பின் பேசிய வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தன், திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இதுபோன்று காட்டுப்பன்றிகள் தொல்லை இருந்ததால், அதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மருந்து, பயிர்கள் மீது அடிக்கப்பட்டது. அதுபோல் மதுரை மாவட்டத்தில் 15 இடங்களில் மருந்து அடிக்கப்பட்டுள்ளது. அதில் பன்றி தொல்லை கட்டுக்குள் வந்தால், மாவட்டம் முழுவதும் எங்கெங்கு பன்றிகள் தொல்லை இருந்தாலும், இந்த மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 2023-ம் ஆண்டு சிறுதானிய ஆண்டு. எனவே விவசாயிகள் அதிகளவில் சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். வருங்கால இளையதலைமுறையினரும் சாகுபடி செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றார்.


Next Story