பசுமை சாம்பியன் விருது பெற நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்கலெக்டர் தகவல்
பசுமை சாம்பியன் விருது பெற நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பசுமை சாம்பியன் விருது
தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு, அதாவது தனிநபர்கள் அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கி, தலா ரூ.1 லட்சம் வீதம் பண முடிப்பும் வழங்க உள்ளது. அதன்படி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக தங்கள் மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.
சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு
இதில் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட கலெக்டரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மாவட்ட வாரியாக தகுதி வாய்ந்த 100 தனி நபர்கள், நிறுவனங்களை தேர்வு செய்ய உள்ளது.
விண்ணப்பம்
இதில் கடலூர் மாவட்டத்தில் 3 விருதுகளுக்கு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. இந்த விருதுக்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் (www.tnpcb.gov.in) விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
இதுதொடர்பான கூடுதல் தகவல்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் கடலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகி அறிந்து கொள்ளலாம். இந்த விருது பெறுவதற்கு 15.4.2023-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.