ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் தாக்கம் இல்லை


ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் தாக்கம் இல்லை
x

விருதுநகர் மாவட்டத்தில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் தாக்கம் ஏதும் இல்லாத நிலையிலும், இதுகுறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் தாக்கம் ஏதும் இல்லாத நிலையிலும், இதுகுறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தாக்கம் இல்லை

நீலகிரி மாவட்ட தேசிய வன காப்பகத்தில் கடந்த வாரம் 39 காட்டுப்பன்றிகள் இறப்பு ஏற்பட்டு அதனை பரிசோதனை செய்து ஆய்வுக்கு அனுப்பியதில் அவை அனைத்தும் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் நோய் மூலம் இறந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட வனத்துறையினரை தொடர்பு கொண்டு வனக்காப்பக எல்லை பகுதிகளில் காட்டுப்பன்றிகளை கண்காணித்திடவும், ஏதேனும் இறப்பு இருந்தால் தாக்கல் தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை எந்த காட்டுப்பன்றியும் நோய் தாக்கப்பட்டு இறந்ததாக தகவல் இல்லை. எனவே, மாவட்டத்தில் எவ்விதநோய் தாக்கம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும் மாவட்டத்தின் வழியாக பன்றிகள் வாகனங்களில் ஏற்றி செல்லும் போது அதுகுறித்து தீவிர விசாரணை நடவடிக்கை மேற்கொள்ளப்படவும் உள்ளது. மாவட்டத்தில் 28 பன்றி பண்ணைகள் இருப்பதாக தரப்பட்ட தகவலின் அடிப்படையில் அனைத்து பன்றி பண்ணைகளிலும் ஒன்றிய அளவில் குழு அமைத்து தொடர்ந்து ஆய்வு செய்யவும் நோய் அறிகுறி அல்லது இறப்பு இருப்பின் உடனடியாக தெரிவிக்கவும் கால்நடை பராமரிப்புத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அச்சம் தேவையில்லை

இந்நோயானது பன்றிகளில் இருந்து மனிதர்களுக்கு, ஆடு, மாடு போன்ற வளர்ப்பு கால்நடைகளுக்கு பரவாது. ஒரு பன்றியில் இருந்து மற்றொரு பன்றிக்கு மட்டுமே பரவக்கூடிய நோயாகும். எனவே, விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் இதுகுறித்து அச்சம் அடைய தேவையில்லை.

சுகாதாரமான முறையில் கிடைக்கப்பெறும் பன்றி இறைச்சியை நன்றாக வேக வைத்து சாப்பிடுவது அவசியம். கால்நடை பராமரித்துறையினர் பன்றி பண்ணையாளர்களுக்கு தொடர்ந்து தொழில்நுட்ப ஆலோசனை வழங்குவதோடு பண்ணைகளை ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story