50 சதவீத மானியத்தில் நிலம் வாங்க விண்ணப்பிக்கலாம்
தாட்கோ நிறுவனத்தின் மூலம் 50 சதவீத மானியத்தில் நிலம் வாங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தாட்கோ நிறுவனத்தின் மூலம் 50 சதவீத மானியத்தில் நிலம் வாங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
50 சதவீதம் மானியம்
ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) நிறுவனம் மூலமாக பல்வேறு சிறப்பு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. 2022-2023-ம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலை மேன்மையடைய, சொந்தமாக விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பு விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மானியம் வழங்குவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பின்படி, இவ்வாண்டு 200 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு சொந்தமாக விவசாய நிலம் வாங்கி விவசாயத்தில் வருவாய் ஈட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற 18 வயது முதல் 65 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்களின், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இணையதளம் மூலம்
விண்ணப்பதாரர்கள் 2.5 ஏக்கா் நஞ்சை அல்லது 5 ஏக்கா் புஞ்சை நிலத்திற்குள் வாங்கலாம். நிலத்தின் சந்தை மதிப்பில் 50 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ.5 லட்சம் ஒரு பயனாளிக்கு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும். நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினர் அல்லாத பிற இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
மேலும் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும். இத்திட்டத்தில் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம்.
பயனடையலாம்
மேலும், தாட்கோவில் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களின் கீழ் நிலம் வாங்குதல், நிலம் மேம்படுத்துதல் மற்றும் துரித மின் இணைப்பு திட்டம் ஆகிய விவசாயம் சார்ந்த திட்டங்களுக்கு மானியம் பெற்று பயனடைந்த பயனாளிகளும், தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு முகமை மூலம் செயல்படுத்தப்படும் நுண்ணீர் பாசனம் "ஒரு துளி அதிகப்பயிர்" திட்டத்திலும் பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.